செவ்வாய் சனி கூட்டணி மதக்கலவரத்தால் பற்றி எரியும் இலங்கை அவசரநிலை

கொழும்பு: இலங்கையில் பௌத்த இஸ்லாமிய சமுதாய மக்களிடையே ஏற்பட்ட கலவரத்தினால் அங்கு அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தி இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

செவ்வாய் உணர்வுக்கான கிரகம், வேகமான கிரகம். சனி பெரிய பணக்காரர்களுக்கும் கீழ்மட்டத்தில் இருப்பவர்களுக்கும் உரிய கிரகம். இவை இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று பகை கொண்டவை.

ஒரு ராசியில் செவ்வாயும், சனியும் பார்க்கும்போது, சேரும்போது இனமோதல் நடக்கும். நடைமுறையில் சனி - செவ்வாய் சேர்க்கை நடக்கும்போதெல்லாம் இதுபோன்ற கலவரங்கள் ஏற்படுகின்றன.

எச்சரிக்கும் ஜோதிடர்கள்

நாளை முதல் தனுசு ராசியில் செவ்வாயும், சனியும் ஒன்று சேர்கின்றது. இது மே மாதம் வரை நீடிக்கும். இந்த கால கட்டங்களில் மோசமான விபத்துகள், சீற்றங்கள், இன மோதல்கள், மதக் கலவரங்கள், வழிபாட்டுத் தளங்களில் திருட்டு கொள்ளை போன்றவை நடக்கும்.

புத்தமத மக்கள்

இலங்கையில் சுமார் 2 கோடியே 10 லட்சம் மக்கள் வாழும் இலங்கையில் 70 சதவீதம் பேர் புத்த மதத்தை சேர்ந்தவர்கள். இந்து மதத்தை சார்ந்த தமிழர்கள் 13 சதவீதமும், இஸ்லாமியர்கள் 9 சதவீதமும் உள்ளனர்.
ஒரு பிரிவினர் பிற பிரிவினரை மதமாற்றம் செய்ய முயற்சித்து வருவதாக ஓராண்டு காலமாக தகவல்கள் பரவி வந்தது.

இரு பிரிவினர் மோதல்

இந்நிலையில், கடந்த 27ஆம் தேதியன்று அம்பாறை மாவட்டத்தில் முஸ்லீம் சமூகத்தினரின் வழிபாட்டு தலங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதனையடுத்து கண்டியில் முஸ்லீம் சமூகத்தினர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் சிங்கள வாலிபர் ஒருவர் காயமடைந்தார். அந்த வாலிபர் மரணமடையவே இது சிங்களவர் முஸ்லீம் இடையேயான கலவரமாக மாறியது.

கண்டியில் கலவரம்

இதற்கு பழிவாங்கும் வகையில் கடந்த 4ஆம் தேதி கண்டி மாவட்டத்தில் தாக்குதல் நடைபெற்றது. கடைகள் தீ வைக்கப்பட்டன. கடந்த இருநாட்களாக கண்டி மாவட்டம் மற்றும் அதன் அருகாமையில் உள்ள பகுதியில் இருதரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். கடைகள், வழிபாட்டுத்தலங்கள், தீ வைத்து எரிக்கப்பட்டன.

ராணுவம் குவிப்பு

தலைநகர் கொழும்புவில் இருந்து கண்டி மாவட்டத்திற்கு போலீசாரும் துணை ராணுவ படையினரும் அனுப்பி வைக்கப்பட்டனர். கலவரத்தை கட்டுப்படுத்த தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டு ஆகியவை பிரயோகிக்கப்பட்டன. நிலைமை விபரீதம் ஆவதை தடுக்கும் வகையில் நேற்று ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அவசரநிலை பிரகடனம்

இந்நிலையில், இந்த வன்முறை சம்பவங்கள் நாட்டின் பிறபகுதிகளுக்கு பரவுவதை தடுக்கும் வகையில் இன்றிலிருந்து பத்து நாட்களுக்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் வன்முறையான கருத்துக்களை பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும், அமைதியை பராமரிக்கவும் அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சனி பகவானுடன் சேர்க்கை

யுத்த கிரகங்களான செவ்வாயும் சனியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டாலோ, ஒரே ராசியில் கூட்டணி சேர்ந்து அமர்ந்தாலே அந்த கால கட்டத்தில் பெரும் இயற்கை சீற்றங்கள், கலவரங்கள் நடைபெறும் வாய்ப்பு உள்ளது. நீர் ராசியான விருச்சிகத்தில் 2015,16ஆம் ஆண்டுகளில் செவ்வாய் சனி கூட்டணியாக இருந்த போது மிகப்பெரிய வெள்ளம் தமிழகத்தை குறிப்பாக தலைநகரம் சென்னையை தாக்கியது.

செவ்வாய் சனி சேர்க்கை

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களும், தென் மாவட்டங்களும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டன. நாளை முதல் செவ்வாய் கிரகம், தனுசு ராசியில் சனியுடன் சேர உள்ளது. இந்த இடப்பெயர்ச்சியினால் ஏற்படும் பாதிப்பு சில மாதங்களுக்கு முன்பே தமிழகத்தில் தொடங்கிவிட்டது. மீனாட்சி அம்மன் கோவில் தொடங்கி பல கோவில்களில் தீ விபத்து ஏற்பட்டது.

அவசரநிலை

இலங்கையில் மதக்கலவரம் மூண்டுள்ளது. அங்கு மத வழிபாட்டுத்தலங்களும், கடைகளும் தீ பற்றி எரிகின்றன. பல ஆண்டுகளுக்குப் பின்னர் அங்கு அவசர நிலை பிரகடனப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திடீர் கலவரம் மற்றும் அவசரநிலை காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.