ராஜபக்சேவின் சின்னமான தாமரை மொட்டிலிருந்து தமிழீழம் மலரும் சம்மந்தன் எச்சரிக்கை

கொழும்பு: ராஜபக்சேவின் சின்னமான தாமரை மொட்டிலிருந்து தமிழீழம் மலரும் என எதிர்க்கட்சித்தலைவர் சம்மந்தன் இலங்கை நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக சம்மந்தன் இவ்வாறு கூறியுள்ளார். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மகிந்த ராஜபக்சேவும் அவரது சகாக்களும் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்தால் தமிழீழம் உருவாகும் என பரப்புரை மேற்கொண்டு சிங்கள மக்களை ஏமாற்றியதாக சம்மந்தன் நாடாளுமன்றத்தில் விமர்சனம் செய்திருக்கிறார். 

ஒன்றிணைந்த இலங்கைக்குள் அதிகபட்ச அதிகார பகிர்வைத்தான் விரும்புவதாக சம்மந்தன் விளக்கியிருக்கிறார். தனி தமிழீழம் என்ற கோரிக்கையை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முன்வைக்கவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். மீண்டும் ராஜபக்சே ஆட்சிக்கு வந்தால் தமிழீழம் உருவாகும் என்று சம்மந்தன் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.