தமிழினத்துக்காக உயிர்நீத்த மாவீரர்களை அஞ்சலிப்போம்!

நவம்பர் மாதம் என்றதும் நினைவுக்கு வருவது மாவீரர் தினம். தமிழர்களின் இதயங்களில் மறக்க முடியாத தியாகிகளான மாவீரர்களை இன்று உலகெங்கிலும் பரந்து வாழும் ஈழத் தமிழர்கள் உணர்ச்சிபூர்வமாக அஞ்சலிக்கின்றனர்.

இம்முறை வன்னியிலுள்ள அனைத்து மாவீரர் துயிலுமில்லங்களில் அஞ்சலி நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அமைப்புகள், பொது மக்கள் எனப் பல்வேறு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

படையினரால் அபகரிக்கப்பட்டு இராணுவ முகாம்களாக மாற்றப்பட்டு வைத்திருக்கின்ற சில மாவீரர் இல்லங்களில் மாவீரர் தினத்தை கடைப்பிடிக்க முடியாத நிலையுள்ளது. கிளிநொச்சி தேராவிலில் அமைந்திருந்த மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவம் முகாம் அமைத்துள்ளது.

தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவம் நிலை கொண்டிருப்பதனால் கிளிநொச்சி மாவட்ட மாகாண சபை உறுப்பினர்களோடு மாவீரர்களின் உறவினர்களும் கூடவே சென்று குறித்த முகாமுக்கு அருகில் உள்ள காணியொன்றில் இன்று மாவீரர்களுக்குச் சுடரேற்றி அஞ்சலி செலுத்துவதற்காகப் பற்றைக் காடுகள் துப்புரவாக்கப்பட்டுள்ளன.

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம், தென்மராட்சியிலுள்ள கொடிகாமம் மாவீரர் துயி லும் இல்லம் ஆகியவற்றிலும் படைத் தரப்பினரால் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

போர் முடிவுக்கு வந்த பின்னர் 2009ஆம் ஆண்டிலிருந்து மாவீரர் தினத்தை தமிழ் மக்கள் எந்த வகையிலும் கடைப்பிடிப்பதற்கு சிங்கள அரசுகள் அனுமதியளிக்கவில்லை.

ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி மாவீரர் நாள் வருகின்றது எனும் போது மாவீரர்களின் உறவினர்களின் ஏக்கங்களும், துயரங்களும் சொல்லில் வடித்திட இயலாது பொங்கிப் பெருகுகின்றன.

மகிந்த ராஜபக்ச ஆட்சியும் படைகளும் தமிழ் மக்களது அந்த உணர்வுகளுக்கு தடைபோட்டிருந்தனர். மீறி மாவீரர் எவரேனும் கடைப்பிடித்தால் அது பெரும் குற்றமாகக் கருதப்படும்; கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என மகிந்த அரசு அறிவித்திருந்தது.

2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்த போதும் கூட்டு அரசானது மாவீரர் தினத்தை முழுமையாகக் கடைக்கொள்ள இடம்கொடுக்கவில்லை. படையினரின் கெடுபிடிகளும் அச்சுறுத்தல்களும் நெருக்குவாரங்களும் அதிகரித்திருந்தன.

2016ஆம் ஆண்டிலும் மாவீரர் தினம் கடைப்பிடிப்பது குறித்து கூட்டாட்சி அரசில் உள்ள முக்கிய அமைச்சர் ஒருவர் மாவீரர் தினத்துக்கு எத்தனை பேர் வருவார்கள் என எள்ளி நகையாடியிருந்தார். அமைச்சரின் கூற்றைப் பொய்ப்பிக்கும் விதத்தில், கடந்த வருடம் மாவீரர் நாளினை வடக்கில் பெருமெடுப்பிலும் கிழக்கில் ஓரளவுக்கும் வெளிப்படையாகக் கடைப்பிடிக்கப்பட்டிருந்தது.

விடுதலைப் புலிகள் இல்லாது போனாலும் துயிலுமில்லங்கள் உயிர்ப்புடனேயே இருக்கும் என்பதால்தான் போரை முடிவுக்குக் கொண்டு வந்தவுடன் மாவீரர் துயிலும் இல்லங்களை அரசு உருத்தெரியாமல் அழித்து நிர்மூலமாக்கியது. சில துயிலுமில்லங்களின் மீது நிரந்தரமான படைத்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த வருடம் நவம்பர் மாதம் சில மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பல அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் மாவீரர்களின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம், முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லம் போன்றவற்றில் அதிரடியாக சிரமதானப் பணிகள் மேற்கொண்ட போது படையினரின் கெடுபிடிகள் பெரிதளவில் இருக்கவில்லை.

தமிழ் மக்களும் மாவீரர்களின் நினைவு நாள் கடைப்பிடிப்பது குறித்து மனதார நெகிழ்ந்தனர். தாம் தமது நெஞ்சங்களில் பூஜிக்கும் மாவீரர்கள் குறித்து அந்த நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டும்; சுடர் ஏற்ற வேண்டும்; மலரஞ்சலி செலுத்த வேண்டும் என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் மேலிட்டெழுந்தது.

படையினர் எப்படி இதற்கு அனுமதித்தனர் என்ற கேள்விகளும் இதில் கலந்து கொள்ளலாமா? விடலாமா? என்ற மனப்பயமும் பலரிடம் குடிகொண்டிருந்தது.

2009ஆம் ஆண்டிலிருந்து 2015ஆம் ஆண்டு வரை மாவீரர் தினத்தை எவரேனும் கடைப்பிடித்தால் அது சம்பந்தமாகச் சுவரொட்டிகள் ஒட்டப்படுமாகவிருந்தால் அவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு கடுமையான தண்டனை விதிக்கப் படும் என அரசும் படைத்தரப்பும் அறிவித்திருந்தது.

ஈழத்தமிழினம் தனக்கெனத் தனியான பாரம்பரியங்கள், மொழி, பழக்க வழக்கங்கள் போன்ற சிறப்பான பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டது. அவர்களது இந்தத் தனித்துவ மரபு வழியானது ஆயிரமாயிரம் ஆண்டுகள் சென்றாலும் கூடவே தமிழர்களோடு பின்னிப்பிணைந்து கொண்டிருக்கின்ற சிறப்பம்சங்களாகும்.

அதேபோல் தமிழ் மக்கள் காலம் காலமாகப் பெருமை கொள்ளக்கூடிய சுமார் 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களையும் அவர்களது அர்ப்பணிப்புக்களையும் தன்னகத்தே வரலாறாகக் கொண்டுள்ளது என்பது தமிழினத்துக்கே கிடைத்த மாபெரும் மதிப்பு என்பதை எவராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் சாவுகள் என்பது மதிப்பு மிக்கவை, பெறுமதியானவை. 30 வருட கால ஆயுதப் போராட்டத்தில் தங்களுடைய இளமைக் காலங்களை இழந்து சுக, துக்கங்களை மறந்து விடுதலைக்காகப் போராடி மடிந்தவர்கள். என்றைக்குமே போராட்டத்தினுள் வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் இனத்தின் விடுதலைக்காக கொடுக்கப்பட்ட உயிர்க் கொடைகள் இவை.

மாவீரர்கள் என்போர் யார்? என்ற கேள்வி எதிர்காலத் தலைமுறைகளால் அந்நியப்பட்டவர்களாக கருதி நடந்து கொள்வது அநாகரிகமாகும். அவர்களுக்குள் ஒரு வரலாறு அடங்கியிருக்கின்றது.

உலகத்திலே கடைசித் தமிழன் இருக்கும் வரையில் அவனது இறுதி மூச்சடங்கும் வரை மாவீரர்களின் உயிர்த் தியாகங்கள் சமரசம் செய்யப்பட முடியாது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவையாகவே இருக்கும். ஈழத்தமிழ் மக்களின் விடிவுக்காக உயிர் துறந்த மாவீரர்களும் அவர்களின் அர்ப்பணிப்புகளும் மதிப்புக்குரியதொன்றாகும்.எவராலும் புறம்தள்ளவோ, விலகியிருக்கவோ முடியாத ஆத்மாத்தமான உணர்வுகள் அவை.

2009ஆம் ஆண்டு முதல் ஏழு வருடங்களாக மாவீரர் நாள் பகிரங்கமாகக் கடைப்பிடிக்க முடியாது போய்விட்டது. என்றாலும் உணர்வு மங்காத் தமிழர்கள் ஆலயங்களிலும் பொது இடங்களிலும் நவம்பர் 27 மாவீரர் ஈகைச்சுடரேற்றி மாவீரரை நினைவு கூர்ந்து வந்தனர். யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மாலை 6.05 மணிக்கு ஏற்றிவிடுவார்கள்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் நாள் மாவீரர் தினம் சிறப்பான முறையில் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டமை ஒரு திருப்புமுனையாக ஆகியிருந்தது. கடந்த வருடம் மாவீரர் தினத்தை மக்கள் கடைப்பிடிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கூட்டு அரசு தமிழ் மக்களுக்கு தார்மீகமாக தனது ஆதரவுச் சமிக்ஞையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வெளிக்காட்டியிருந்தது.

மகிந்தவை ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிப்பதற்கு வடக்கு– கிழக்கு மாகாணத் தமிழ் மக்களின் வாக்குகளே முக்கியமாக இருந்தன. இதற்கு நன்றிக் கடனுக்காக மறைமுகமானதொரு ஆதரவை ஜனாதிபதி வழங்கியிருக்கலாம். அல்லது பன்னாட்டு அழுத்தம் காரணமாகவுமிருக்கலாம்.

மாவீரர் தின நிகழ்வு என்பது கட்சி சம்பந்தப்பட்ட நிகழ்வொன்றல்ல. போரில் களமாடி வீரச்சாவை அணைத்துக் கொண்ட தமது பிள்ளைகளுக்காக அவர்களது பெற்றோர்கள் சொந்தங்களால் கடைப்பிடிக்கப்படுகின்ற வரலாற்று ரீதியிலான அஞ்சலி நிகழ்வு.

இம்முறையும் மாவீரர் தின நிகழ்வு மிகப் பெரிய அளவில் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசினது தடைகளோ படைத்தரப்பின் நெருக்கடிகளோ இருக்கப் போவதில்லை. அது சம்பந்தமான பாதகமான கருத்துக்கள் ஏதும் இதுவரையில் பெரியளவில் வெளிப்படுத்தப்படவில்லை.

மாவீரர் நாளான இன்று தமிழ் இனத்துக்காக உயிர்க்கொடை வழங்கிய மாவீரர்களது பெற்றோர்கள், உறவினர்கள், பொதுமக்கள் என தமிழ் உணர்வுள்ள சகலரும் உரிமையோடு நினைவேந்தலில் கலந்து கொள்ள வேண்டும்.

போர் முடிவடைந்த பின்னர் சிங்கள ஆட்சியாளர்களால் தமிழ் மக்களின் மனநிலையை மாற்றுகின்ற எண்ணமும் சிந்தனையும் வேரூன்றியிருந்தன. தமிழ் மக்களால் அவை உடைக்கப்பட வேண்டும்.

விடுதலையுணர்வு, மண்ணுணர்வு, இன உணர்வு என்பவை மாவீரர்களின் வழி வழிவந்த கொள்கையாகும். இவ்வெண்ணங்களுடன் தான் இன்றும் தமிழ் மக்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதன் அடையாளமாக மாவீரர்களை நினைவு கூர வேண்டும்.

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!