அணியில் வாய்ப்பு கொடுத்த கங்குலிக்கு தோனி செலுத்திய மரியாதை!! நினைவுகூர்ந்து நெகிழ்ந்த தாதா

தனது கடைசி டெஸ்ட் போட்டியில் தோனி தன்னை பெருமைப்படுத்தியதை கங்குலி மனம் நெகிழ்ந்து பகிர்ந்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, அவர் கேப்டனாக பொறுப்பேற்ற காலத்தில் சீனியர் வீரர்கள் களையெடுக்கிறார் என்ற விமர்சனம் எழுந்தது. ஆனால் உடற்தகுதி முக்கியம் என்பதால், வயதில் மூத்த வீரர்களை அவர் ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது. எனினும் அவர் சீனியர் வீரர்களுக்கு மிகவும் மதிப்பளிக்கக்கூடியவர்.

 

 

தோனி, 2004ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார். தோனிக்கு வாய்ப்பு கொடுத்து இந்திய அணியில் அறிமுகப்படுத்தியவர் அப்போதைய கேப்டன் கங்குலி. தோனி, தான் கேப்டனான பிறகு, தனது கேப்டனான கங்குலியை அவரது கடைசி டெஸ்ட் போட்டியில் கௌரவப்படுத்தினார்.

 

 

2008ம் ஆண்டு இந்தியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர்தான் கங்குலியின் கடைசி தொடர். 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட அந்த தொடரின் முதல் போட்டியுடன் அப்போதைய டெஸ்ட் அணிக்கான கேப்டன் அனில் கும்ப்ளே ஓய்வு பெற்றார்.ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு கேப்டனாக இருந்த தோனி, கும்ப்ளேவின் ஓய்விற்கு பிறகு டெஸ்ட் அணிக்கும் கேப்டனானார். அந்த தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியுடன் கங்குலியும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

 

 

அந்த போட்டியில், கடைசி நாள் இரண்டாவது இன்னிங்ஸில் 381 ரன்களை ஆஸ்திரேலியாவுக்கு இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி. அந்த டெஸ்ட் போட்டியுடன் கங்குலி ஓய்வு பெறப்போவதால், அவரை கௌரவப்படுத்தும் விதமாக கடைசி இரண்டு ஓவர்களுக்கு கங்குலியை கேப்டன்சி செய்ய வைத்து அழகுபார்த்தார் தோனி. தனக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுத்த கங்குலிக்கு தோனி செலுத்திய மரியாதை அது.

 

 

பிரேக்ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கங்குலி, இந்த நிகழ்வை நினைவுகூர்ந்து நெகிழ்ந்தார். இதுதொடர்பாக பேசிய கங்குலி, கடைசி இரண்டு ஓவர்களுக்கு என்னை கேப்டன்சி செய்யுமாறு தோனி கூறினார். நான் பரவாயில்லை; நீங்களே செய்யுங்கள் என்றேன். ஆனால் தோனி வற்புறுத்தியதை தொடர்ந்து நானும் கடைசி இரண்டு ஓவர்களுக்கு கேப்டன்சி செய்தேன். அதன்பிறகு தோனியிடம் ஒப்படைத்துவிட்டு ஓய்வு பெற்றேன் என கங்குலி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மேலும் ஒரு சிறிய கிராமத்திலிருந்து வந்து கிரிக்கெட்டில் சாதனைகள் படைத்து தோனி மிகப்பெரிய உச்சம் தொட்டதை நினைத்து கங்குலி பெருமை தெரிவித்தார்.