பல பெண்களுடன் தொடர்பு ஆபாச சாட் விவரங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட முகமது ஷமி மனைவி

கொல்கத்தா: கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளதாக அவர் மனைவி ஹசின் ஜகான் குற்றம்சாட்டியுள்ளார்.

ஷமி பல பெண்களுடன் 'சாட்' செய்த விவரங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், ஹசின் ஜகான். முதலில் இதை பார்த்த பலரும் ஹசின் ஜகான் பேஸ்புக்கை யாரோ ஹேக் செய்து இதுபோல விஷம பிரச்சாரம் செய்திருக்க கூடும் என்றுதான் நினைத்தனர்.

ஆனால் ஹசின் ஜகான், செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இது உண்மை என குறிப்பிட்டு, கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.

பேஸ்புக்கில் படங்கள்

கொல்கத்தாவை பூர்வீகமாக கொண்ட 27 வயது முகமது ஷமி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர். இவருக்கு ஹசின் ஜகான் என்ற மனைவியும், மகளும் உள்ளனர். அவ்வப்போது தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பேஸ்புக்கில் போடுவது ஷமி வழக்கம். முன்பு ஒருமுறை இவ்வாறு மனைவி படத்தை வெளியிட்டபோது, அவர் உடலை முழுக்க மூடும் வகையில் பர்தா அணியவில்லை என்ற விமர்சனங்களை, முஸ்லிம் நெட்டிசன்கள் முன்வைத்தனர். இது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையும் ஆகியிருந்தது.

அதிர்ச்சி சாட்

இருப்பினும் மனைவிக்கு ஆதரவாகத்தான் ஷமி கருத்து கூறினார். எனவே இருவரும் அன்னியோனியமாக இருப்பதாகவே கிரிக்கெட் ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஆனால் ஹசின் ஜகான் நேற்று தனது பேஸ்புக்கில் ஷேர் செய்திருந்த ஸ்க்ரீன் ஷாட் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

ஆபாச உரையாடல்கள்

ஹிந்தி, ஆங்கிலம் என இரு மொழிகளிலும் பல பெண்களுடன் ஷமி பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் வாயிலாக சாட் செய்துள்ள விவரங்களை ஹசின் ஜகான் ஷேர் செய்துள்ளார். அதில் ஒருவர் கராச்சியை சேர்ந்த விபச்சாரி என்றும் தெரிவித்துள்ளார். பல சாட்கள் மிகவும் அந்தரங்க விஷயங்கள் பற்றி பேசியுள்ளதாகவும் காணப்படுகிறது. இந்த பேஸ்புக் பக்கம் இன்று காலை முடக்கப்பட்டுள்ளது.

டார்ச்சர்

டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், ஹசின் ஜகான் இதுபற்றி கூறுகையில், ஷமியின் பிஎம்டபிள்யூ காருக்குள் அவருக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணி பரிசாக கொடுத்த செல்போன் கிடந்ததாகவும், அதை யதேர்ச்சையாக எடுத்து பார்த்தபோது இந்த ரகசியங்கள் தெரியவந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் வெகுகாலமாகவே ஷமியும், அவரது தாய், சகோதரன் ஆகியோரும் தன்னை துன்புறுத்தி, டார்ச்சர் செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.