ஆட்டத்தை புரட்டி போட்ட 18வது ஓவர் வெற்றியை தன்வசமாக்கிய தென்னாப்பிரிக்கா

நான்காவது ஒருநாள் போட்டியில் இந்தியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது.

இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான 4வது ஒருநாள் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று நடந்தது. மூன்று போட்டிகளில் தோற்ற தென்னாப்பிரிக்கா, தொடரை இழக்காமல் தக்கவைக்க நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கியது.

நேற்று தென்னாப்பிரிக்க அணி பிங்க் நிற ஆடையில் களமிறங்கியது. அந்த ஆடையில் அந்த அணி தோற்றதே கிடையாது. மேலும் காயம் காரணமாக கடந்த 3 போட்டிகளில் விளையாடாத டிவில்லியர்ஸ் நேற்று களமிறங்கினார்.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தொடக்கத்திலேயே ரோஹித்தின் விக்கெட்டை இழந்தாலும் கேப்டன் கோலி மற்றும் தவான் இணை மிக சிறப்பாக விளையாடி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தியது. கோலி 75 ரன்களில் வெளியேற, தனது 100வது போட்டியில் சதமடித்தார் தவான். 109 ரன்களில் தவான் பெவிலியன் திரும்பினார். 

அதன்பிறகு, ரஹானே, ஸ்ரேயாஷ் ஐயர், பாண்டியா ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். தோனி 43 ரன்கள் எடுத்தார். 50 ஓவர் முடிவில் இந்திய அணி 289 ரன்கள் எடுத்தது.

 

 

290 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் மார்க்ரம் மற்றும் ஆம்லா நிதானமாக ஆடினர். எனினும் மார்க்ரம் 22 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார். அப்போது மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதுவரை தென்னாப்பிரிக்க அணி 7.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் எடுத்திருந்தது.

சிறிது நேரம் கழித்து 28 ஓவர்களாக குறைக்கப்பட்டு ஆட்டம் தொடங்கியது. 28 ஓவருக்கு 202 ரன்கள் எடுக்க வேண்டும் என தென்னாப்பிரிக்காவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பந்தை விட அதிக ரன்கள் எடுக்க வேண்டியிருந்ததால், அந்த அணி வீரர்கள் அதிரடியாக ஆடினர். 

டுமினி பத்து ரன்களிலும் ஆம்லா 33 ரன்களிலும் வெளியேறினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிவில்லியர்ஸ், 18 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதன்பிறகு ஜோடி சேர்ந்த மில்லர் மற்றும் கிளஸன் ஜோடி அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப் பாதை நோக்கி அழைத்துச் சென்றது. இதில் மில்லருக்கு அதிர்ஷ்டம் காத்திருந்தது. 

 

 

அவர் 6 ரன்னில் இருந்தபோது 18வது ஓவரை சாஹல் வீசினார். சாஹலின் பந்தை மில்லர் தூக்கி அடிக்க, பந்து ஸ்ரேயாஷ் ஐயரிடம் சென்றது. ஆனால் அந்த கேட்சை ஐயர் தவறவிட்டார். அதற்கு அடுத்த பந்தில் மில்லரை கிளீன் போல்டாக்கினார் சாஹல். ஆனால் அது நோபால். இப்படியாக இருமுறை தப்பிய மில்லர், அதன்பின்னர் இந்திய பவுலர்களின் பந்துகளை பறக்கவிட்டார். 39 ரன்கள் சேர்த்த மில்லர், சாஹல் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார்.

 

 

அடுத்து களமிறங்கிய பெலுக்வாயோ, 3 சிக்ஸர்கள் ஒரு பவுண்டரியுடன் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இதையடுத்து அந்த அணி 25.3 ஓவரிலேயே இலக்கை எட்டி முதல் வெற்றியை பதிவு செய்தது.

ஒருவேளை மில்லரின் கேட்சை ஸ்ரேயாஷ் ஐயர் பிடித்திருந்தாலோ அல்லது போல்டானது நோபாலாக இல்லாமல் இருந்திருந்தாலோ மில்லர் வெளியேறியிருப்பார். இந்தியா வெற்றி பெற்றிருக்கும். 18வது ஓவர் தான் இந்திய அணியின் வெற்றியை தென்னாப்பிரிக்க அணிக்கு தாரை வார்த்தது.