கடினமாக உழைத்துதான் கடைசி டெஸ்டில் வென்றுள்ளோம் கோலி பெருமிதம்

கடினமாக உழைத்து கடைசி டெஸ்டிலும், முதல் 3 ஒருநாள் ஆட்டங்களிலும் வென்றுள்ளோம் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறினார்.

கேப் டவுனில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. அந்த ஆட்டத்தில் கோலி ஆட்டமிழக்காமல் 160 ஓட்டங்கள் விளாசியிருந்தார். இது ஒருநாள் போட்டிகளில் அவரது 2-வது அதிகபட்ச ஓட்டங்கள்.

அத்துடன், நியூலேண்ட்ஸ் மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சதம் விளாசிய முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார். மேலும், இந்திய கேப்டனாக 12 சதங்கள் விளாசி சௌரவ் கங்குலியின் சாதனையையும் முறியடித்தார்.

இந்தநிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோலி, “இந்த ஆண்டில் 30 வயதை எட்டுகிறேன். இப்போது வெளிப்படுத்தும் ஆட்டத்தை 34-35 வயதிலும் விளையாட விரும்புகிறேன். அதனாலேயே அதிகமாக பயிற்சி எடுத்துக்கொள்கிறேன். ஏனெனில், தீவிரமாக ஆடுவதே எனது விருப்பமாகும்.

அந்த ஆட்டத் தன்மையை இழக்கும் பட்சத்தில் களத்தில் நான் என்ன செய்யப்போகிறேன் என்று எனக்கே தெரியவில்லை. எனவே, முடிந்த வரையில் தீவிரமாக ஆடுவதை பாதுகாத்துக்கொள்ள முயற்சிக்கிறேன். அதற்காக பயிற்சி செய்வதோடு, உணவுக் கட்டுப்பாட்டுடன் இருக்கிறேன்.

அதுபோன்ற தியாகங்களுக்கு இதுபோன்ற வெற்றி பலனாக கிடைக்கிறது. அணிக்கு தேவை ஏற்படும்போது முடிந்ததைச் செய்ய வேண்டும். ஒரு வீரராக இதுபோன்ற நாள்களுக்காகவே காத்திருக்கிறோம். 3-வது ஆட்டத்தில் அடித்த சதம் சிறப்பான ஒன்றாகும்.

சர்வதேச போட்டிகளில் ஓட்டங்கள் எடுப்பது எளிதல்ல. பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தின் சூழ்நிலை வேறு. ஆனால், இதுபோல பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் அதற்கேற்றவாறு நமது ஆட்டத்தை தகவமைத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

அணிக்கான தேவையை கருத்தில் கொள்ளும்போது, நம்மையும் மீறிய ஒரு உந்துதல் நமது இயக்கத்தை ஊக்குவிக்கும். அதுவே, இதுபோன்ற ரன் குவிப்புகளுக்கு உதவியாக இருக்கிறது. அது ஒரு அற்புதமான உணர்வு.

கேப் டவுன் ஆட்டத்தில் முதலில் பேட் செய்யும்போது, தவனுடன் ஆடுகையில் சிங்கிள்களாக ஆடிவந்தேன். அப்போது அந்த பார்ட்னர்ஷிப்பை நீட்டிப்பது தேவையாக இருந்தது. அதுவே, அவர் ஆட்டமிழந்த பிறகு எனது ஆட்டத்தை தீவிரமாக்கினேன்.

சேஸ் செய்ய 2-வதாக பேட் செய்யும்போது இலக்கு என்ன என்பது தெரிந்துவிடும். எனவே, தேவைக்கேற்றவாறு ஆட்டத்தில் ஏற்ற இறக்கத்துடன் ஆடினால் சரியாக இருக்கும்.

கடினமாக உழைத்து கடைசி டெஸ்டிலும், முதல் 3 ஒருநாள் ஆட்டங்களிலும் வென்றுள்ளோம். ஒர் அணியாக பெருமையாக உணர்கிறோம். எனினும், இந்தத் தொடரில் எங்கள் பணி இன்னும் முழுமையடையவில்லை” என்று கோலி தெரிவித்தார்.