அதிக சதமடித்த ஆச்சர்ய கேப்டன்கள் சச்சின் கங்குலியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் விராட் கோலி

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதம் அடித்த இந்திய கேப்டன்கள் பட்டியலில் 12 சதங்களுடன் விராட் கோலி முதல் இடத்தைப் பெற்றுள்ளார். அதே நேரத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் கோலி 55 சதங்களுடன் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்

தென்ஆப்ரிக்கா சென்றுள்ள இந்தியா அணி ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய நேற்று மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியின் இந்த ஹாட்ரிக் வெற்றியை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில்  சிறப்பாக விளையாடிய இந்திய கேப்டன் விராட் கோலி சதம் அடித்தார். இது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவரது 34-வது சதமாகும். ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருக்கும் கோலி இந்த சதத்தின் மூலம் புதிய சாதனையை படைத்துள்ளார்.

ஒருநாள் போட்டிகள் இந்திய அணியின் கேப்டனாக அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 12 சதங்களுடன் கோலி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவரைத்தொடர்ந்து சவுரவ் கங்குலி 11 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்த 12 சதங்களையும் அவர் கேப்டனாக பொறுப்பேற்ற 43 போட்டிகளில் அடித்துள்ளார். 

 

 

அதே நேரத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் கோலி 55 சதங்களுடன் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர் ,  ரிக்கி பாண்டிங், , குமார் சங்ககாரா ,  ஜாக்கஸ் கல்லிஸ்  ஆகியோர் முதல் நான்கு இடங்களில் உள்ளனர்.

இன்றைய போட்டியில் அவர் 100 ரன்களை கடக்க 119 பந்துகள் எடுத்துகொண்டார். இதுவே அவரது மெதுவான ஒருநாள் சதம் ஆகும். முன்னதாக கடந்த 2015-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராகவும் 119 பந்துகளில் சதம் அடித்திருந்தார்