டிவில்லியர்ஸை விரட்டியடித்த விராட் கோலி டி காக் கின் கையை உடைத்த பும்ரா

டெஸ்ட் தொடரை 2-1 என வென்ற தென்னாப்பிரிக்க அணி, 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் இந்தியாவிடம் படுதோல்வி அடைந்துள்ளது.

இன்னும் 4 ஒருநாள் போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், 2 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றாலே இந்திய அணி தொடரை வென்றுவிடும். ஆனால், தொடரை வெல்ல அந்த அணி, எஞ்சிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும்.

இந்த இக்கட்டான சூழலில் அந்த அணிக்கு மேலும் ஒரு வகையில் நெருக்கடி அதிகரித்து வருகிறது. ஏற்கனவே டிவில்லியர்ஸ் மற்றும் டுபிளெசிஸ் ஆகிய இரண்டு சீனியர் வீரர்கள் அணியில் இல்லாத சூழலில், தற்போது விக்கெட் கீப்பர் டி காக்கும் காயத்தால் எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகுகிறார். இது தென்னாப்பிரிக்க அணிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

 

 

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடியபோது, கேப்டன் விராட் கோலி அடித்த ஷாட்டை கேட்ச் பிடிக்க முயன்றபோது டிவில்லியர்ஸின் கையில் அடிபட்டது. இதையடுத்து அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை.

அதற்கடுத்ததாக அந்த அணியின் கேப்டன் டுபிளெசிஸுக்கு, முதல் ஒருநாள் போட்டியில் அடிபட்டதால் அவரும் இரண்டாவது ஒருநாள் போட்டியிலிருந்து விலகிவிட்டார். மார்க்ரம் கேப்டனாக செயல்பட்டார். மூன்றாவது போட்டியில் விளையாடுவாரா என்பது தெரியவில்லை.

இந்நிலையில், அந்த அணியின் விக்கெட் கீப்பரும் ஓபனிங் பேட்ஸ்மேனுமான குயிண்டன் டி காக்கும் காயம் காரணமாக எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். இரண்டாவது ஒருநாள் போட்டியில், இரண்டாவது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வீசினார். அந்த ஓவரை டி காக் எதிர்கொண்டார். அந்த ஓவர் முழுவதுமே பும்ரா மிரட்டலாக பந்து வீசினார். 

அதிலும் குறிப்பாக இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்துகள் அடுத்தடுத்து டி காக்கின் கையை பதம் பார்த்தது. இதனால் ஆட்டத்தின் போதே வலியால் துடித்தார் டி காக். எப்படியோ அந்த போட்டியை ஆடிமுடித்துவிட்டார்.

ஆனால், இவரை பரிசோதித்த மருத்துவர்கள் 4 வாரங்கள் வரை ஓய்வெடுக்க அறிவுறுத்தியதால், அவரும் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. நான்காவது போட்டியில் டிவில்லியர்ஸ் களமிறங்கும் நிலையில், டி காக் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. இவ்வாறு அந்த அணி சீனியர் வீரர்கள் அனைவரும் ஒரு போட்டியில் கூட இணைந்து விளையாட முடியவில்லை. நல்ல ஃபார்மில் உள்ள இந்திய அணிக்கு, இது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.