ஒப்பந்த விதிகளை மாற்றி நடந்த ஊழல்.. ரபேல் ஒப்பந்தத்தில் புதிய ஆதாரம்.. நேரடியாக தலையிட்ட மோடி?

ரபேல் ஒப்பந்தத்தில் மோசடி செய்வதற்கு ஏற்ற வகையில் பிரதமர் மோடி அரசு பல ஒப்பந்த விதிகளை மாற்றி இருப்பதாக பரபர குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது.

சென்னை: ரபேல் ஒப்பந்தத்தில் மோசடி செய்வதற்கு ஏற்ற வகையில் பிரதமர் மோடி அரசு பல ஒப்பந்த விதிகளை மாற்றி இருப்பதாக பரபர குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது.

''விதிமுறைகளில் சிக்காமல் இருப்பது எப்படி?.. விதிமுறைகளையே மாற்றிவிடு'' ரபேல் ஊழலில் பாஜக செய்திருக்கும் தவறை இந்த ஒரு வரியில் விளக்கி விட முடியும். சில முக்கியமான இந்திய ஒப்பந்த விதிமுறைகளை தங்களுக்கு ஏற்றபடி மாற்றி பாஜக ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு செய்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது.

ரபேல் ஒப்பந்தம் நடந்த போது, பிரான்ஸ் அரசுடன் இந்திய பிரதமர் மோடி, தனியாக பேரம் பேசினார், சிலருக்காக மோடி பேரம் பேசி இந்தியாவிற்கு இழப்பு ஏற்பட செய்தார் என்று தி இந்து ஆங்கில பத்திரிகையில் பத்திரிக்கையாளர் என்.ராம் எழுதி இருந்தார்.

மீண்டும் குற்றச்சாட்டு

இது ரபேல் ஊழலில் மிகப்பெரிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. தற்போது தி இந்து ஆங்கில பத்திரிக்கையில் என்.ராம் இன்று இன்னொரு கட்டுரையும் எழுதி உள்ளார். அதன்படி ரபேல் ஒப்பந்தத்தில் சில முக்கிய ஒப்பந்த விதிமுறைகளை தளர்த்தி, மாற்றி, அதன்பின்பே ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள். மோசடி செய்வதற்கு வசதியாக பல விதிகளை புறந்தள்ளி இந்த ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

விதிகளில் மாற்றி இருக்கிறார்கள்

அதாவது இரண்டு நாடுகளுக்கு இடையில் பொதுவாக ஒப்பந்தங்கள் நடக்கும் போது பணம் எப்படி அளிப்பது, எந்த கணக்கில் அளிப்பது, வாரண்டி என்ன என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் கருத்தில் கொள்ளப்படும். இந்த விதிகளை எல்லாம் புறந்தள்ளி , முழுக்க முழுக்க பிரான்ஸ் நிறுவனமான டஸால்ட் நிறுவனத்திற்கு ஆதரவாகவும், இந்திய ஒப்பந்ததாரரான ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்திற்கம் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இதனால் என்ன

இந்த குற்றச்சாட்டின்படி, மத்திய அரசு விமானங்களை பெறுவது குறித்த கேரண்டியை பிரான்ஸ் அரசிடம் இருந்து பெறவில்லை, அதேபோல் வங்கி கேரண்டி பெற வேண்டும் என்ற விதி மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் பெனால்டி பெறுவதற்கான விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதது, ஏஜென்சி கமிஷனுக்கு எதிரான விதிகள் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது, இத்தனை மாற்றங்களை செய்துதான் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறது.

பணம் கொடுத்துள்ளனர்

சரியாக சொல்ல வேண்டும் என்றால் இந்தியா இந்த ஒப்பந்தத்தில் ஏமாற்றம் அடைந்து இருக்கிறது. வேண்டும் என்றே பிரதமர் மோடி இந்த விதிகளை திருத்தி இந்தியா ஏமாற வழி வகுத்து இருக்கிறார். யாரோ பலன் அடைய வேண்டி, பிரான்ஸ் அரசுக்கு ஆதரவாக ஒப்பந்தத்தை மாற்றி இருக்கிறார். அது மட்டுமில்லாமல், இத்தனைக்கும் மத்தியில் பிரான்ஸ் அரசுக்கு இந்தியா முன்பணம் வேறு கொடுத்து இருக்கிறது.

என்ன பிரச்சனை

இதில் இன்னொரு பிரச்சனை என்னவென்றால், இந்திய அரசுக்கு பிரான்ஸ் கேரண்டி கொடுக்காத காரணத்தால், இந்தியாவிற்கு பிரான்ஸ் விமானத்தை கொடுக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. நம்மிடம் அவர்கள் முன்பணம் வாங்கி இருந்தால் கூட அவர்கள் விமானத்தை நமக்கு அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. இது இந்தியாவிற்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

எதனால்?

இதனால் தற்போது பல சந்தேகங்கள் எழுந்துள்ளது. பிரான்சுக்கு ஆதரவாக பிரதமர் மோடி விதிகளை மாற்றியது ஏன்? யாருக்கு பலன் அளிப்பதற்காக மோடி இந்தியாவிற்கு எதிராக விதிகளை மாற்றினார். ரபேல் ஒப்பந்தத்திற்கு ஒரு வாரத்திற்கு முன் இந்தவிதிகளை மாற்ற அவசியம் என்ன என்று பல கேள்விகளை இது எழுப்பி உள்ளது.