13 உயிர்களை கொன்று.. ரத்தம் ருசித்த.. அவனி சுட்டு கொலை.. மகாராஷ்டிராவில் பரபரப்பு!

13 பேரை கொன்ற அவனி புலி சுட்டுக் கொலை செய்யப்பட்டது.

மும்பை: மகாராஷ்டிராவின் யவத்மால் பகுதியில் 13 உயிர்களைப் பலி கொண்ட அவனி என்ற பெண் புலி சுட்டுக் கொல்லப்பட்டது. சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே இது தொடர்பாக கண்டதும் சுட உத்தரவிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

கடந்த 2 வருடமாகவே யவத்மால் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது அவனி. பெண் புலியான அவனியிடம் சிக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பெரும் பதட்டமாகவே இந்தப் பகுதி இருந்து வந்தது. கடந்த செப்டம்பர் மாதம் இதுதொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், பலரது உயிர்களைப் பறித்து வரும் இந்தப் புலியை கண்டதும் சுட உத்தரவிட்டது. இது பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது.

சுட்டுக்கொலை

இந்த நிலையில் நேற்று இரவு அவனி சுட்டுக் கொல்லப்பட்டது. கொல்லப்பட்ட அவனிக்கு பிறந்து 10 மாதமேயான 2 குட்டிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

குறிபார்த்து சுடுபவர்கள்

கடந்த 3 மாதமாக அவனியைத் தேடும் வேட்டை தீவிரமானது. கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்டோர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். யானைகளும் கூட இதில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. மேலும் குறி பார்த்து சுடுவதில் வல்லவர்களும் இதில் ஈடுபட்டிருந்தனர்.

திப்பேஸ்வர்

டிரோன்கள், வேட்டை நாய்கள் என மிக மிக பெரிய தேடுதல் வேட்டை நடந்து வந்தது. இந்த நிலையில்தான் திப்பேஸ்வர் புலிகள் சரணாலயத்திற்குட்பட்ட பகுதியில் அவனி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவனியின் அடையாளம்

யவத்மால் பகுதியில் அவனியின் நடமாட்டம 2012ல் தொடங்கியது. அவனி வந்தது முதலே தனது உயிர் வேட்டையைத் தொடங்கி விட்டது. அந்தப் பகுதியில் மொத்தமே 2 புலிகள்தான் உள்ளன. ஒன்று ஆண் புலி, இன்னொன்று அவனி. இதில் கொல்லப்பட்ட 13 பேரின் உடலிலும் அவனியின் விரல் அடையாளங்களே உள்ளன. டிஎன்ஏ சோதனை மூலம் இது நிரூபிக்கப்பட்டது. இப்படி பலரையும் தூங்க விடாமல் செய்து வந்த அவனி நேற்று ஒரு வழியாக கொல்லப்பட்டு விட்டது.

மிருகங்களின் எல்லை

என்னதான் கொடூரப் புலியாக இருந்தாலும் இப்படி வேட்டையாடி கொல்லப்பட்டது வருத்தம் தருவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், மனிதன் என்று மிருகங்களின் எல்லைக்குள் புகுந்தானோ அன்றைக்கே தொடங்கி விட்டது இந்த வேட்டை என்பதுதான் உண்மையான வருத்தமாக இருக்க வேண்டும்!