ருசியாக மீன் சமைத்த ஹோட்டல் சமையல்காரர்.. ரூ. 25,000 டிப்ஸ் + சாப்பாடும் ஊட்டி விட்ட அமைச்சர்!

மங்களூரு: ருசியாக சமைத்த ஹோட்டல் சமையல்காரருக்கு ரூ.25,000 டிப்ஸ் அளித்ததோடு, சாப்பாடும் ஊட்டி விட்டு ஷாக் தந்துள்ளார் கர்நாடக அமைச்சர் ஜமீர் அகமது.

கர்நாடக மாநிலத்தின் உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் பி ஜமீர் அகமது கான். கடந்த வாரம் இவர் மங்களூரு நகருக்கு சென்றிருந்தார். அப்போது பிஷ் மார்க்கெட் என்ற ஹோட்டலுக்கு அவர் மதிய உணவருந்தச் சென்றார். அமைச்சர் ஜமீர் அகமது கானுடன் முன்னாள் எம்எல்ஏ மொய்தீன் பாபா, வக்பு வாரியத் தலைவர் மோனு, இப்திகார் அலி, அமைச்சரின் சகோதரர் காதர் உள்ளிட்டோரும் சென்றிருந்தனர்.

பல்வேறு வகையான மீன் வகை உணவுகள் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அவற்றில், பாம்பிரட் மற்றும் அஞ்சல் மீன்களால் செய்யப்பட்ட உணவுகளை அமைச்சர் விரும்பிச் சாப்பிட்டார். பின்னர், உணவின் ருசியைப் பாராட்ட விரும்பிய அமைச்சர், ஹோட்டலின் நிர்வாகியை அழைத்துப் பேசியுள்ளார்.

அப்போது அந்த உணவைச் சமைத்த அந்த ஹோட்டலின் தலைமை சமையல் கலைஞர் ஹனீப் அகமதுவை அமைச்சருக்கு அறிமுகப்படுத்தியுள்ளார் நிர்வாகி. உடனே ஹனீப்பை தனது அருகில் அமர வைத்த அமைச்சர், தனது தட்டில் இருந்த உணவுகளை எடுத்து அவருக்கு அன்புடன் ஊட்டி விட்டார். பின்னர் அவரது சமையலைப் பாராட்டி ரூ. 25 ஆயிரம் பணத்தை டிப்ஸாக அளித்துள்ளார்.

மேலும், புனித ஹஜ்பயணம் சென்றுவிட்டாயா எனக் ஹனீபிடம் கேட்டுள்ளார் அமைச்சர். அதற்கு ஹனீப் இல்லை எனப் பதிலளிக்கவும், அவர் புனித ஹஜ்பயணம் செல்வதற்கான அனைத்து உதவிகளையும் செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார் அமைச்சர். தனது உதவியாளரிடம் ஹனீப்பின் விவரங்களைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் உத்தரவிட்டார்.

 

அடுத்தடுத்து நடந்த இந்த எதிர்பாராத இன்ப அதிர்ச்சிகளால் சமையல் கலைஞர் ஹனீப் மகிழ்ச்சியில் உறைந்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், "அமைச்சர் எனக்கு இப்படி இன்பஅதிர்ச்சி அளிப்பார் என்று நினைக்வில்லை. இதற்குமுன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, குலாம் நபி ஆசாத் ஆகியோர் எனது உணவைச் சாப்பிட்டு இருக்கிறார்கள். அவர்கள் பாராட்டுமட்டும்தான் தெரிவித்தனர். ஆனால், அமைச்சர் ஜமீல் எனக்கு ரூ.25 ஆயிரம் டிப்ஸ் அளித்து, ஹஜ் பயணத்துக்கும் உதவுவதாகத் தெரிவித்துள்ளார். எனது 18 ஆண்டு வாழ்க்கையில் இப்படியான சம்பவத்தை சந்திப்பது இதுதான் முதல்முறை" என்றார்.