ஆன்மீக பயணத்தில் அரசியல் பேச மாட்டேன் என்ற ரஜினிக்கு இமாச்சலப் பிரதேசத்தில் என்ன வேலை

ரஜினி இமய மலைக்கு புறப்படுவதற்கு முன்னரும் சரி, அங்கு சென்ற பொழுதும் சரி மக்கள் பிரச்சனை குறித்த கேள்விகளை முன்வைத்த பொழுது, ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ளதால், அரசியல் பேச நான் விரும்பவில்லை.

ஆன்மிக யாத்திரைக்காக இங்கு வந்துள்ளேன். வழக்கமான பணிகளில் இருந்து, சற்றே வித்தியாசமாக, புனிதப் பயணமாக இது அமைந்துள்ளது. இந்தப் பயணம் சிறப்பானதாக உள்ளது. எனவே, தயவுசெய்து அரசியல் வேண்டாம்" என்றார்.

ஆனால் சொல்லி ஒரு நாள் கூட இருக்காது, இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பாஜக கட்சியின் மூத்த தலைவருமான பிரேம்குமார் துமலை ரஜினி சந்தித்துப் பேசியுள்ளார்.

இதிலிருந்து  பாஜகவிற்கு ரஜினி உடனான நெருக்கம் புலப்படுகிறது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

சென்னையில் நடந்த எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசியதில் இருந்து,  தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சியை அளிப்பேன் என்று கூறும் நடிகர் ரஜினிகாந்த்,  இதுநாள் வரையிலும் மத்தியில் உள்ள பாஜக அரசு மீது எந்த விமர்சனத்தையும் வைக்கவில்லை.

அதேபோல பாஜக தலைவர்களும் ரஜினி குறித்து விமர்சனம் செய்வதில்லை. ஏதோ ஒரு டீலிங் நடப்பதை போல அரசியல் நகர்வு இருக்கிறது.

எல்லாவற்றையும் விட முக்கியமான ஒன்றாக இமாச்சலப் பிரதேசத்தில் தங்கியிருக்கும் ரஜினி, பாஜகவை சேர்ந்த அம்மாநில முன்னாள் முதல்வர் பிரேம்குமார் துமலைச் சந்தித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்பின்போது பத்திரிகையாளர்கள் யாரும் அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.