கண் கலங்க வைத்த நிகழ்வு அம்மா இறந்தது கூட தெரியாமல் 6 வயது மகன் செய்த காரியம்

ஐதராபாத்தில் தனது அம்மா இறந்தது கூட தெரியாமல் அவருடனேயே மகன் தூங்கிய சம்பவம் நடந்துள்ளது.

ஐதராபாத்தின் கடேடன் எனும் பகுதியை சேர்ந்தவர் 36 வயதான சமீனா சுல்தானா, இவருக்கு 6 வயதில் சோயிப் என்ற ஒரு மகன் உள்ள நிலையில், கணவர் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

இதனையடுத்து சமீனா தனது மகனுடன் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், திடீரென சமீனாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

எனவே அவர் தனது மகன் சோயிப்புடன் ஓஸ்மானியா அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார்.

ஆனால் துரதிருஷ்ட வசமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே சமீனா மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.

இதனை அறியாத அவரது மகன் தன் தாயின் அருகிலேயே படுத்து தூங்கியுள்ளான், அதன் பின்னர் சில மணிநேரம் கழித்து மருத்துவர்கள் வந்து பரிசோதித்த போது தான் சமீனா இறந்தது தெரியவந்தது.

தனது தாயை விட்டு பிரிய மனமில்லாமல் சோயிப் கதறி அழுதது பார்ப்போரை கண்கலங்க வைத்தது, இதனை அடுத்து உறவினர்களிடம் சமீனாவின் உடல் ஒப்படைக்கப்பட்டது.