என்ஆர்ஐ கணவர்களே மனைவியை விட்டு விட்டு எஸ் ஆகப் பாக்கறீங்களா ஸாரி பாஸ் பேட் நியூஸ்

டெல்லி: மனைவியை இந்தியாவில் விட்டு விட்டு நைசாக தப்பி வரும் என்ஆர்ஐ கணவர்களைத் தண்டிக்கும் வகையில் புதிய நடவடிக்கை ஒன்றை மத்திய வெளியுறவுத்துறை எடுத்து வருகிறது. இதுபோன்று கைவிடப்படும் மனைவியர் நலனைக் கருத்தில் கொண்டு இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வரவுள்ளது மத்திய அரசு.

இந்தியாவில் மனைவியரை விட்டு விட்டு வெளிநாட்டுக்கு ஓடிப் போய் விடும் கணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது. மேலும் இந்திய நீதிமன்றங்கள் அனுப்பும் சம்மன்களை மதிக்காமல் புறக்கணிக்கும் கணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் இந்த சட்டத் திருத்தம் வழி செய்யும்.

அதை விட முக்கியமாக இப்படிப்பட்ட கணவர்மார்களின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினருக்குச் சொந்தமாக இந்தியாவில் உள்ள சொத்துக்களை அப்படியே கையகப்படுத்தும் முக்கிய அம்சமும் இந்த சட்டத் திருத்தத்தில் இடம் பெறப் போகிறது. வெளியுறவுத்துறை இந்த திருத்தங்களை மேற்கொள்ள உத்தேசித்துள்ளது. இதுதொடர்பாக அது சட்ட அமைச்சகத்தையும் அணுகியுள்ளது.

பாலியல் தொல்லை 
சிறுமிகளுக்கு நலன் பயக்கும் சட்டத் திருத்தம்

இதேபோல மத்திய மகளிர் மற்றும் சிறார் நலத்துறை அமைச்சகம், ஒரு முக்கிய சட்டத் திருத்தத்தை கோரியுள்ளது. அதாவது சிறு வயதில் சிறுமிகள் சந்திக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து அவர்கள் வளர்ந்து பெரியவர்களான பிறகும் கூட புகார் கொடுத்து குற்றம் இழைத்தவர்களை தண்டிக்க வகை செய்யும் சட்டத் திருத்தமே அது.

 

என்ஆர்ஐ கணவர்களுக்கு ஆப்பு 
தவறு செய்தால் தண்டனை

இந்த இரு முக்கியத் திருத்தங்களையும் விரைந்து பரிசீலித்து மசோதாவாக கொண்டு வருமாறு சட்ட அமைச்சத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது நடைமுறைக்கு வந்தால் மனைவியரைக் கைவிட்டு விட்டு வெளிநாடுகளில் ஹாயாக வலம் வரும் கணவர்களுக்கு சரியான ஆப்பு வைக்கப்படும். அதேபோல சிறுமிகளுக்குப் பாலியல் அக்கிரமம் செய்யும் வேட்டை நாய்களுக்கும் விலங்கு பூட்டப்படும் வாய்ப்பு உருவாகும்.

 

பாதிக்கப்படும் பெண்கள் 
பாதிக்கப்படும் பெண்கள் அதிகரிப்பு

சமீப காலமாக என்ஆர்ஐ கணவர்களால் கைவிடப்படும் மனைவியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பலர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். பலர் விவாகரத்து செய்யப்படுகின்றனர். இதனால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகத்திற்கு புகார்களும் குவிந்து வருகின்றன.

 

சட்டத்தின் ஓட்டை 
ஓட்டையைப் பயன்படுத்தி எஸ்கேப்

இதுபோன்ற சம்பவங்களில் என்ஆர்ஐ கணவர்கள் இந்திய நீதிமன்றங்கள் அனுப்பும் சம்மன்களைக் கண்டு கொள்வதில்லை. அவர்கள் வசிக்கும் நாடுகளின் சட்டத்தை பயன்படுத்தி தப்பி வருகிறார்கள். எனவே இவர்களைத் தண்டிக்க முடியாத நிலை உள்ளது. இதைப் போக்கவே சட்டத் திருத்தம் பரிசீலிக்கப்படுகிறது.
புதிய சட்டத் திருத்தத்தின்படி ஒரு நபருக்கு 3 முறை சம்மன் அனுப்பியும் அவர் பெற்றுக் கொள்ளாவிட்டால் அவரை தப்பிஓடி தலைமறைவானர் பட்டியலில் சேர்க்க முடியும். அப்படி சேர்த்து விட்டால் அவரை நாடு கடத்தி நமது நாட்டுக்கு கூட்டிக் கொண்டு வந்து விட முடியும். இதனால் தவறு செய்யும் நபர் சட்டத்தை மதித்து விசாரணைகளுக்கு உட்பட முன்வருவார் என்று நம்பப்படுகிறது.