முதல்வருக்கு எதிராக அல்வா கொடுத்த பாஜகவினர் பரபரப்பில் அரசியல் களம்

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியை கண்டித்து அம்மாநில பா.ஜ.கவினர் அல்வா விற்பனை செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதமர் மோடி பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்பேட்டியில் அவர் கூறுகையில், பக்கோடா விற்பவர் கூட நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் வருவாய் ஈட்டுவதாக தெரிவித்தார். மேலும் பா.ஜ.க தலைவர் அமித்ஷாவும் பக்கோடா விற்பனை செய்வது தவறில்லை என்றும் கூறினார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில் மத்திய அரசை கண்டிக்கும் விதமாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கடந்த 7ம் தேதி பக்கோடா விற்கும் போராட்டத்தில் ஈடுபட்டார். மத்திய அரசு வெளியிட்ட பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான திட்டங்கள் எதுவும் இல்லை என்று குற்றம்சாட்டிய முதலமைச்சர் நாராயணசாமி பக்கோடா, பஜ்ஜி விற்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் புதுச்சேரியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் அமைச்சர்களும் கலந்து கொண்டனர். 

இந்த நிலையில் முதலமைச்சர் நாராயணசாமியை கண்டித்து புதுச்சேரி பா.ஜ.கவினர் இன்று அல்வா விற்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியின் நேரு வீதியில் முதலமைச்சர் நாராயணசாமி பெயரில் அல்வா கடை ஒன்றை திறந்து பா.ஜ.க நூதன போராட்டம் நடத்தினர்.

மக்களுக்கு அறிவித்த திட்டங்களை செயல்படுத்தாமல் முதலமைச்சர் நாராயணசாமி அல்வா கொடுத்ததாக கூறி பா.ஜ.கவினர் இத்தகைய போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமான பா.ஜ.கவினர் கலந்து கொண்டனர்.