முதல்வரின் ஒற்றை வார்த்தையால் அரண்டு போன மோடி அவசர அவசரமாக செய்த காரியம்

மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு நிதி எதுவும் ஒதுக்கீடு செய்யவில்லை என்பதால் மிகவும் அதிருப்தியடைந்த அம்மாநில முதல்வர் சந்திர பாபு நாயுடு, பிரதமர் மோடி அரசுடனான கூட்டணியில் தொடர வேண்டுமா என்று கேள்வி எழுப்பியிருந்தார். 

மேலும் அவர், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள், கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இது குறித்து அவர்கள் பா.ஜ.கவுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்தனர்.

அதோடு மட்டுமல்லாமல் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்கித் தரக் கோரி, அங்கு முழு அடைப்புப் போராட்டமும் நடைபெற்றது. பா.ஜ.கவுடனான கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்வதற்காக கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டம்  நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சமாதானம் செய்துள்ளார். இதனையடுத்து பா.ஜ.கவுடனான கூட்டணி தொடரும் என்றும் அதே நேரத்தில் சிறப்பு நிதி ஒதுக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்போம் என்றும் தெலுங்கு தேசம் அறிவித்தது.

இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தின் திட்டங்களுக்காக, ரூ.1,269 கோடியை மத்திய அரசு தற்போது ஒதுக்கீடு செய்துள்ளது. மொத்தம் உள்ள 1,269 கோடி ரூபாயில், போலாவரம் நீர்ப்பாசனத் திட்டத்திற்கு ரூ.417.44 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், மாநிலப் பிரிவினைக்குப் பிறகு ஏற்பட்ட வருவாய் பற்றாக்குறையை சரிசெய்வதற்கு 369.16 கோடி ரூபாயும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 253.74 கோடி ரூபாயும், அங்கன்வாடி மற்றும் ஊட்டச்சத்து திட்டத்திற்கு 192.92 கோடி ரூபாயும் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்திற்கு 31.76 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் நலன்களுக்காக மத்திய அரசை மிரட்டி காரியம் சாதித்துக் கொண்ட முதலமைச்சர் சந்திர பாபு நாயுடுவை அம்மாநில மக்கள் பாராட்டி வருகின்றனர்.