சிவராத்திரியை முன்னிட்டு குஜராத்தில் பிப்.13-ல் நிர்வாண சாமியார்கள் பேரணி

ஜூனாகாத்: மகா சிவராத்திரியை முன்னிட்டு குஜராத்தின் ஜூனாகத் கிர்நார் மலைஅடிவாரத்தில் வரும் 13-ந் தேதி நிர்வாண சாமியார்களின் பேரணி நடைபெற உள்ளது. இதற்காக நிர்வாண சாமியார்கள் ஜூனாகாத்துக்கு படையெடுத்து வருகின்றனர்.

கிர்நார் மலை அடிவாரத்தில் உள்ள பாவ்நாத் கோவில் கிணற்றில் சிவராத்திரி நாளில் நிர்வாண சாமியார்கள் புனித நீராடுவர். இதைக் காண்பதற்காக பல்லாயிரக்கணக்கானோர் ஆண்டுதோறும் திரள்வது வழக்கம்.

இந்த ஆண்டு சிவராத்திரி விழா நேற்று பாவ்நாத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 5 நாட்கள் நடைபெறும் சிவராத்திரி நிகழ்வின் கடைசியில் நிர்வாண சாமியார்கள் சாகச ஊர்வலங்களை நடத்துவர்.

அதன்பின்னர் பாவ்நாத் சிவன் கோவிலில் உள்ள கிணற்றில் புனித நீராடி வழிபாடு நடத்துவர். இதற்காக நிர்வாண சாமியார்கள் பாவ்நாத் கோவிலுக்கு படையெடுத்து வருகை தருகின்றனர்.