பள்ளி மைதானத்தில் டான்ஸர்கள் குத்தாட்டம் மொட்டை மாடியில் தேர்வு எழுதிய பரிதாப மாணவர்கள்

போபால்: பள்ளி மைதானத்தில் நடன நிகழ்ச்சி நடைபெற்றதால் மத்திய பிரதேசத்தில் மொட்டை மாடியில் தேர்வு எழுதிய நிலை ஏற்பட்டது.

மத்திய பிரதேசத்தில் திகாம்கரில் உள்ளது அரசுப் பள்ளி. இங்கு அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கலைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துவிட்டார்.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்த நிகழ்ச்சி குறித்து அறியாத மாவட்ட நிர்வாகம் இதே நாளில் மாணவர்களுக்கு தேர்வு நடத்த அட்டவணை கொடுத்துவிட்டது. இந்நிலையில் பள்ளி மைதானத்தில் நிகழ்ச்சியையொட்டி வண்ணமிகு அலங்காரங்கள், கலர் கலராக பலூன்கள் கட்டப்பட்டிருந்தது.

இதையடுத்து தேர்வை மாற்ற இயலாததால் மாணவர்களை மொட்டை மாடிக்கு அனுப்பி அங்கு தேர்வு எழுதுமாறு உத்தரவிடப்பட்டது. விசில் சப்தம், பாட்டு சப்தத்துக்கு மத்தியில் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

வெயில் காய்ந்ததால் தேர்வு எழுத முடியாமல் மாணவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். மாணவர்களின் நலனில் அக்கறை இல்லாமல் இப்படி பாட்டும் ,குத்தாட்டமுமாக இருந்தது அதை பார்த்தவர்களுக்கு வேதனையை அளித்தது.

இதேபோல் கடந்த ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் மிர்ஸாபூரில் உள்ள ஒரு பள்ளி டான்ஸ் ஆடும் கிளப்பாக மாறியது. பெண்கள் போஜபுரி நடனங்களை ஆடியபோது அங்கு சுற்றியிருந்த ஆண்கள் பணத்தை அந்த பெண்களின் மழையாக வீசியது குறிப்பிடத்தக்கது. எனினும் அன்றைய தினம் ரக்ஷாபந்தன் என்பதால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது