அங்கே நுழைவது மட்டுமல்ல கால் வைக்க நினைத்தாலே உயிர் போய் விடும் இந்தியாவையே நடுங்க

தன் முன்னால் கூனிக் குறுகி நின்ற அந்த கோட்டை வீரனைக் கோபம் பொங்கப் பார்த்தாள் ரத்தினவதி. சிவந்த அவளின் முகம், கோபம் அதிகரித்ததால் அந்தி சாயும் சூரியனாக பொன் நிறமாக மேலும் சிவந்திருந்தது. அவளது கண்கள் அனலைக் கக்கின. அவள் பார்வையின் கூர்மையினைத் தாங்க இயலாது, தலை குனிந்து நின்றான் அந்தக் காவல் வீரன்.
   
அவனைப் பிடித்துக் கொண்டு வந்திருந்த தளபதியிடம், “இந்தக் கிழவன் கையூட்டு வாங்கிக் கொண்டு, செய்யப் போகும் காரியத்தை தடுக்க வேண்டாம். இவனை நம்பியே எதிரிகள் உள்ளே வரட்டும். பார்த்துக் கொள்ளலாம்” என்று ரத்தினவதி சொன்னாள். தளபதி மறு பேச்சு பேசாமல், அவளைத் தலை வணங்கி விட்டு, அந்த வீரனை இட்டுக் கொண்டு சென்றான்.
   
ரத்தினவதி சில நிமிடங்கள் அமைதியாக யோசித்தாள். கடந்த மாதம்,  ஒரு நாள் இரவில், அந்தக் கோட்டையின் மேலே, யாருக்கும் தெரியாமல் ரகசியமாக கயிற்றில் ஏறி வந்த சில முகலாய வீரர்களைக் கண்டு திடுக்கிட்டாலும், உடன் தனது காவலர்களுக்கு ரகசிய உத்தரவு போட்டாள். அந்த முகலாய வீரர்களை முன்னேற விட்டு, பின் தங்களது கோட்டைப் பொறிகளில் இருந்து, அவர்கள் மீது, கற்களையும், கொதிக்கும் எண்ணெயையும் எறிய வைத்து அவர்களை ஓட வைத்தாள்.
   
அவள் எப்போதுமே, கோட்டையில் உலாத்தும் போது, ஆண் உடை தரித்து, இடுப்பில் வாளுடன், குதிரை மேல் அமர்ந்து கோட்டையின் மேல் மாடங்களில் வலம் வருவாள். அவ்வளவு பெரிய கோட்டை அது. மணல் மேட்டில் ஒரு ஊரின் அளவிற்கு, இரட்டைக் கொத்தளங்களைக் கொண்ட ஜெய்சால்மர் கோட்டையின் நடமாட்டங்களை அவ்வளவு எளிதில் எதிரிகள் யாரும் கண்டறிய முடியாது. போகும் வழியும், திரும்பும் வழியும் வேறாக இருக்கும். மேலும் நூற்றுக் கணக்கான பாதைகள் இருக்கின்றன. ஆயிரக் கணக்கில், அந்தக் கோட்டையில் வீரர்கள் காவல் இருக்கின்றனர்.
   
இத்தனையையும் கடந்து, கோட்டைக்குள் எதிரிகள் உள்ளே நுழைய முயற்சிக்கிறார்கள் என்றால், இங்கு கோட்டையில் இருக்கும் யாரோ துரோகியாக மாறி விட்டிருக்கிறான். அவன் யார் என்று அறிய வேண்டும், என்று முயற்சி செய்து, அவனைக் கண்டு பிடித்தும் விட்டாள். அவன் அந்தக் கோட்டையின் மூத்த காவலாளி. கோட்டையின் விபரங்கள், வழிகள் எல்லாம்அவனுக்கு அத்துப்படி. வயதானவன். அதனால் எளிதில் எதிரிகளிடம் விலை போய் விட்டான். பரவாயில்லை. அதுவும் நன்மைக்கே.அவன் சொல்லித் தான் நாளை எதிரிகள் படையெடுத்து வரும் செய்தியே அவளுக்குத் தெரிந்தது.
   
ஏதிரிகள் தானாக வந்து நம்மிடம் சிக்கட்டும், என்று அடுத்த  நாளுக்காக காத்திருந்தாள். ரத்தினவதி ஜெய்சால்மரை ஆட்சி செய்யும் ரத்தின சிம்மரின் மகள். பெயருக்கேற்ற பேரழகி. அந்த அழகுடன் கூர்மையான அறிவுத் திறன் இருந்தது, அவளுக்கு கூடுதல் சிறப்பு. மேலும், மிகச் சிறந்த வீராங்கனை. போர்க் கலைகள் அனைத்தையும், வெகு சிறப்பாகக் கற்றறிந்தவள். ஒரு ஆண் போலத் தான் வளர்ந்தாள். அதனால், கோட்டைக்குள் இருக்கும் காவல் கண்காணிப்பு பொறுப்புகளைத் தானே முன் வந்து ஏற்றுக் கொண்டாள். அந்த வீரத்திற்குத் தான் அடுத்த நாள், ஒரு சவால் காத்திருந்தது.
   
டெல்லி முகலாய அரசனின் தளபதி மாலிக்காபூர், அந்தக் கோட்டையைக் கைப்பற்ற எண்ணி, முதலில் மாறு வேடத்தில் வந்து நோட்டம் விட்ட போது, அந்தக் கோட்டையின் பிரம்மாண்டத்தையும், இரட்டைக் கொத்தள அமைப்புகளையும் கண்டு, மிரண்டு போனான். இந்தக் கோட்டைக்குள் நுழைவது மட்டுமல்ல. கோட்டையை நோக்கி எந்தப் பக்கம் படைகளுடன் வந்தாலும், மாட்டிக் கொள்வோம் என்பதை அறிந்து, தான் அந்த வயதான காவல் வீரனிடம் ஏராளமான பொன்னைக் கொடுத்து, கோட்டைக்குள் செல்ல உதவுமாறு கேட்டுக் கொண்டான். இப்போது, அந்த விஷயம் ரத்தினவதிக்குத் தெரிந்து, அவன் மூலமாகவே, மாலிக்காபூரைப் பிடிக்கத் திட்டமிட்டாள்.
   
மறு நாள், மாலிக்காபூரின் படைகள், ஜெய்சால்மர் கோட்டையின் நான்கு புறங்களிலும் முற்றுகை இட்டனர். ஏற்கனவே, திட்டமிட்டிருந்த படி, மன்னர் ரத்தினசிம்மர் கோட்டைக்கு வெளியே எதிரிப் படைகளிடம் போரிட்டுக் கொண்டிருந்தார். அந்த வயதான கோட்டை வீரன், மாலிக்காபூரிடம் சொன்ன படி, கோட்டைக் கதவைத் திறந்து அவனும் அவனது படை வீரர்களும் உள்ளே செல்ல வழி விட்டான்.


 
அவர்கள் கோட்டைப் பாதைக்குள் போய்க் கொண்டேயிருந்தார்கள். வெகு நீளமான பாதை அது. முன்னேறிச் சென்று கொண்டிருந்த மாலிக்காபூரின் முன்பாக, அந்தப் பாதையின் குறுக்கே, சிறைக் கதவு போல, மிகப் பெரிய கம்பிக் கதவுகள், அந்தப் படையினரின் முன்னும், பின்னும் விழுந்தன. அவர்கள் முன்னேறவும் முடியவில்லை. திரும்பச் செல்லவும் முடியவில்லை. பொறியில் அகப்பட்ட எலிகள் போல அல்லாடினார்கள்.

அவர்கள் சிறை வைக்கப்பட்ட செய்தி டெல்லி சுல்தானுக்குச் சென்றது.
வேறு வழியின்றி, அலாவுதீன் கில்ஜி, ஜெய்சால்மர் மன்னருடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டான். அதனால் மாலிக்காபூர் விடுவிக்கப் பட்டான். யாரும் பிடிக்க முடியாத வேங்கை என்று பெயரெடுத்த, தென் இந்தியாவையே நடுங்க வைத்த மாலிக்காபூரை, ஜெய்சால்மர் ரத்தினவதி தனது புத்திக் கூர்மையால் வென்று விட்டாள்.

ஒரே போட்டியில் 10 கேட்ச் தோனியை விஞ்சிய சகா