நீ என்ன கோலம் போடுற.. கிளி இருக்கா.. மறக்க முடியாத அந்தக் கால தீபாவளி

சமூக உறவுகளை புதுப்பித்து தந்ததாக இருந்தது அன்றைய கால தீபாவளி பண்டிகை.

சென்னை: அப்பவெல்லாம் தீபாவளி எப்படி இருந்துச்சு தெரியுமா? இப்ப இருக்கிற இளைஞர்களுக்கும், பிள்ளைகளுக்கும் அந்த கொண்டாட்டத்தை பற்றி எதுவுமே தெரியவே தெரியாது. அவர்களுக்குதான் இந்த செய்தி!!

தமிழ்நாட்டில் இருக்கிற பண்டிகையில 2தான் முக்கியமானது. ஒன்னு பொங்கல், இன்னொன்னு தீபாவளி. இந்த தீபாவளி பண்டிகை என்றாலே கொண்டாட்டம் 10-நாளுக்கு முன்னாடியே ஆரம்பிச்சிடும்.

மஞ்சள் வாடை

நிறைய வீடுகளில் தீபாவளிக்கு துணி எடுக்கும்போதே பொங்கலுக்கும் துணி எடுத்து கொள்ளும் பழக்கம் இருந்தது. எடுத்த புது துணிகளில் உடனே மஞ்சளை தடவி வைத்துவிட்டு, அந்த மஞ்சள் வாசத்தோடு ஆடைகளை அணிந்து வருவர் சிறுவர், சிறுமியர்கள்.

நுரைக்க நுரைக்க ருசி

இப்போது போல ரெடிமேட் ஸ்வீட் அப்போது கிடையாது. எல்லா இனிப்புகளையும் அம்மாக்களும், பாட்டிகளும், அத்தைமார்கள், சித்திமார்கள் தங்கள் கைமணம் நுரைக்க நுரைக்க ருசி பொங்க சமைத்து போட்டார்கள். முறுக்கு, சீடை, அதிரசம் செய்ய வீட்டில் அம்மாக்கள் அரிசியை வாங்கி ஊறவைத்து, காய வைத்து, உலர்த்தி வைக்கும் ஏற்பாட்டுடன் பண்டிகை தொடங்கும்.

பலகார டப்பாக்கள்

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பட்சணம் செய்ய செய்ய... அதை பார்க்க பார்க்க நாவில் எச்சில் ஊறும்.. ஆனால் அம்மாவின் கண்டிப்புடன் கூடிய வார்த்தைகள் அந்த பட்சணத்தை எடுத்து சாப்பிட தடை போடும். ஒவ்வொரு டப்பாக்களிலும் அந்த பலகாரங்கள் இறுக்கமான மூடிகளுக்குள் போய் அடைந்து கொள்ளும். காற்று கூட போக முடியாது அந்த பலகார டப்பாவிற்குள்.

பாம்பு மாத்திரைகள்

அதேபோல குழந்தைகள் தங்கள் என்னென்ன பட்டாசுகளை வாங்க வேண்டும் என்று பேப்பர் எடுத்து ஒரு லிஸ்ட் போடுவார்கள். அதில் முதலாவது எழுதுவது பாம்பு மாத்திரைதான். இது பார்ப்பதற்கு மாத்திரை சைஸில் கறுப்பாக இருக்கும். அதை கொளுத்தினால் கரித்துகள்கள் பாம்பு போல நெளிந்து எரிந்து விழும். அதிலிருந்து புகை நிறைய வரும். இதுபோன்ற புகைகள் சுவாச பிரச்சனை ஏற்படும் என்பதால் இந்த பாம்பு மாத்திரைக்கு தடை போடப்பட்டு விட்டது.

குடிசைகள் எரிந்தன

பெண்கள் எல்லாம் சுறுசுறுகம்பி, மத்தாப்பு, ஸ்டோன், சங்குசக்கரம், ஜாட்டி என கொளுத்தி மகிழ, ஆண்கள் எல்லாம் லஷ்மி வெடி, சங்கர் வெடி, சரவெடி என வெடித்து மகிழ்வார்கள். இதில் அதி வீரமான, தைரியமான ஒருவர் இருந்தால் அவர் வெடிக்கும் வெடி பெயர் டைம்பாம். இதை பற்ற வைக்க படும் பாடே அலாதியாக இருக்கும். அதன்கூடவே ராக்கெட். இந்த ராக்கெட்டை பற்ற வைத்து பல குடிசை வீடுகள் எரிந்த வரலாறும் ஒவ்வொரு தீபாவளிக்கும் உண்டு.

பொங்கி வரும் மாவு

அதேபோல பெண்களுக்கு வீட்டில் வேலைகள் எவ்வளவு இருக்குமோ அதே அளவு வேலைகள் ஆண்களுக்கும் இருக்கும். பண்டிகை முடிவதற்குள் அவர்களுக்கு பெண்டு கழண்டி விடும். மாவு அரைக்க மிஷின்களுக்கு செல்வது, துணி, பட்டாசுகள் வாங்க செல்வது, சமையலுக்கு தேவையான பொருட்களை வாங்கி வர செல்வது, என வெளி வேலை பின்னி எடுத்துவிடும். அதிலும் சிலரை வீட்டில் வடைக்கு மாவு அரைக்க ஆட்டுக்கல்லில் உட்கார வைத்துவிடுவார்கள். கல்லில் மாவு அரைப்பதும், வழிந்து வரும் மாவை கல்லுக்குள் பொங்கி வெளியே வந்துவிடாமல் தள்ளிவிடுவதும்தான் இவர்களுக்கு வேலை.

கிளி, மயில்

தீபாவளி முதல்நாளே வீட்டில் யாரும் தூங்க மாட்டார்கள். விடிய விடிய தெருவே விழித்திருக்கும். பச்சரிசை மாவை கொண்டு வாசலில் பெண்கள் கோலம்போட, அதை ஆண்கள் உட்கார்ந்து வேடிக்கை பார்க்க என தெருவே கலகலகவென இருக்கும்."நீ என்ன கோலம் போடுறே, உன் கோலத்தில் கிளி இருக்கா, மயில் இருக்கா?" என பெண்கள் அடுத்தவர் வீட்டு கோலத்தை எட்டி பார்க்கும் அழகே தனிதான். சில கோலங்களில் HAPPY DEEPAVALI என்று இங்கிலீஷில் கோலம்போட போய்.. அதிலும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் என்று அந்த கோலம்கூட அழகாகத்தான் இருந்தது!!

உறவுகள் வளர்ந்தது

அவரவர் வீட்டில் சுட்ட பலகாரங்களை தட்டில் வைத்து ஒவ்வொரு வீட்டுக்கும் இனிய உறவு பரிமாற்றம் நடக்கும். பலகாரங்களுடன் உறவுகளும் சேர்ந்தே இனித்தது அன்றைய தீபாவளிகளில்!! இன்றைய தீபாவளியைப் பார்க்கிறோம்.. ஆனாலும் என்னவோ மனசெல்லாம் மத்தாப்பூ பூக்க மறுக்கிறது.. மாறாக.. சாலமன் பாப்பையாவின் பட்டிமன்ற கலகலப்புதான் காதை வந்து கட்டிக் கொள்கிறது.. "ஹேப்பி டிவி தீபாவளி" என்றாகி விட்டது இன்றைய காலம்!