சிவராத்திரியைப் பற்றி நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை

ஒவ்வொரு மாதமும் வருகின்ற அமாவாசையிலிருந்து பதினான்கு திதியன்று பிரதோஷ நாளாக வழிபடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சிவனை வழிபடுவது அவசியமாகும். இந்த நாளினை சிவராத்திரி என்றும் வழங்குகிறார்கள் . மாசி மாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் அம்பாள் சிவனை வணங்கிய நாளையே நாம் மகா சிவராத்திரி என்று கொண்டாடுகிறோம். இந்த நாள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வரும்.

இம்முறை பிப்ரவரி பதிமூன்றாம் தேதி மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. சிவனுக்கு உகந்த விரத நாட்களாக எட்டு வகையான விரதங்கள் சொல்லப்படுகிறது. சோம வார விரதம், திருவாதிரை, உமா மகேஸ்வர விரதம்,கோதர விரதம்,கல்யாண விரதம்,சூல விரதம்,ரிசப விரதம் மற்றும் மஹா சிவராத்திரி விரதமாகும். இவற்றில் மஹா சிவராத்திரி விரதம் என்பது தன மிகவும் விஷேசமானது.

சிவராத்திரி உருவான கதையும், அதனை கொண்டாடும், வழிபடும் முறைகளைப் பற்றியும், அதனை கொண்டாட வேண்டிய முக்கியத்துவத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

பார்வதி தேவி சிவனின் கண்களை விளையாட்டாக மூடுகிறாள். இதனால் உலகமெங்கும் இருள் சூழ்ந்தது. மக்கள் எல்லாம் அவதிப்படுவதை பார்த்து சிவன் தன்னுடைய நெற்றிக் கண்ணை திறக்க இப்போது அதீத ஒளி மக்களை பயமுறுத்தியது. அன்றைய இரவு முழுவதும் பார்வதி தேவி முழித்திருந்து, சிவனுக்கு உரிய அபிஷேகங்கள் எல்லாம் செய்கிறாள்.

இதனால் சிவன் சாந்தமாகி இயல்பு நிலைக்கு திரும்புகிறார். பார்வதி தேவி முழித்திருந்து பூஜை செய்த இரவினைத் தான் மஹாசிவராத்திரி என்று கொண்டாடுகிறோம்.

வாசுகி பாம்பினை கயிறாகவும், மந்திரமலையை மத்தாகவும் கொண்டு பாற்கடலை கடைந்த போது வலி தாங்காத வாசுகி பாம்பு விஷத்தை கக்கியது. மக்களைக் காப்பாற்ற சிவன் அதனை உருண்டையாக்கி வாயில் போட்டுக் கொண்டார்.அதோடு மயங்கியது போல நடிக்கவும் செய்தார்.

இதனால் பயந்து போன தேவர்கள், சதுர்திசி திதியன்று இரவில் நான்கு ஜாமங்களிலும் சிவனுக்கு அபிஷேகம் செய்து வணங்கினர். தேவர்கள் வணங்கி வந்த நாளைத் தான் சிவராத்திரி என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

இந்த கதை அனைவருக்கும் தெரிந்திருக்கும். சிவராத்திரி என்று சொன்னாலே இந்த கதையைத் தான் எல்லாரும் மிகவும் பிரபலமாக சொல்வார்கள்.

அயோத்தியை தசரதர் ஆள்வதற்கு முன்னர் ஆண்டு வந்த மன்னர் சித்திரபானு என்ற அரசரைப் பார்க்க அஷ்டவக்கிர முனிவர் பார்க்க வந்திருக்கிறார். அப்போது மன்னர் சிவராத்திரி விரதம் இருப்பதாகவும், சிவனை பூஜித்துக் கொண்டிருக்கிறார் அதனால் தற்போது காண இயலாது என்று சொல்லியிருக்கிறார்கள். முனிவர் கோபத்துடன் புறப்படத் தயாரான போது அங்கே வந்த அரசன் தான் ஏன் இவ்வளவு உறுதியுடன் இந்த விரதத்தை கடைபிடிக்கிறேன் என்பதற்கு ஒரு கதைச் சொல்கிறார்

இந்த ஜென்மத்தில் அரசனாக இருக்கும் சித்திரபானு முந்தைய ஜென்மத்தில் சுஸ்வரன் என்ற பெயரில் வேட்டைக்காரனாக இருந்திருக்கிறான், ஒரு முறை காட்டில் விலங்கினை வேட்டியாடிவிட்டு திரும்புவதற்குள் இருட்டி விட்டது. இதனால் பிற விலங்குகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள மரத்தின் மீது ஏறியிருக்கிறான் அந்த வேடன்.

அதோடு தூங்கிவிடக்கூடாது, எங்கே தூங்கினால் தூக்கத்தில் கீழே விழுந்து விடுவோமோ என்று பயந்து மரத்திலிருந்து இலைகளை பறித்து கீழே போட்டுக் கொண்டிருந்திருக்கிறான். 
விடியும் வரை இப்படி இலைகளை பறித்துப் போட்டு தூங்காமல் கண்விழித்திருந்தவன் விடிந்ததும் இறங்கி தன் இருப்பிடத்திற்கு சென்றுவிட்டான்.

பின்னர் அந்த வேடன் மரணமடைந்ததும் இரண்டு சிவ தூதர்கள் வந்திருக்கிறார்கள், அவர்கள் மேற்கூரிய சம்பவத்தை நினைவு கூர்ந்து அன்றைய நாள் சிவராத்திரி என்றும் நீ ஏறியது வில்வ மரம் என்றும், அந்த மரத்தடியில் சிவலிங்கம் ஒன்று இருந்திருக்கிறது. அந்த மரத்திலிருந்து வில்வ இலைகளை பறித்து சிவ லிங்கத்திற்கு இரவு முழுக்க கண்விழித்து வில்வ இலைகளால் அபிஷேகம் செய்திருக்கிறாய். நீ தெரிந்தோ தெரியாமலோ செய்த இந்த செயலால் உனக்கு நற்கதி கிடைத்திருக்கிறது என்றார்களாம். அதனால் அடுத்த பிறவியில் அரசாளும் தகுதி பெற்றேன் என்றானாம்.

அதனால் சிவராத்திரி பூஜை செய்பவர்கள் தொடர்ந்து பெரும் செல்வந்தர்களாக இருப்பர் என்று சொல்லப்படுகிறது.

சிவராத்திரி விரதத்தை யார் வேண்டுமானாலும் இருக்கலாம். இதனால் நீங்கள் தெரியாமல் செய்த பாவங்களின் தோஷங்கள் உங்களை விட்டு விலகும். சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு வேளை மட்டும் உணவு உண்ண வேண்டும். சிவராத்திரியன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து சூரிய உதயத்தின் போது காலையில் வீட்டில் செய்ய வேண்டிய பூஜையை முடிக்க வேண்டும். அதன் பின் சிவன் கோவிலுக்குப் போய் முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும்.

வீட்டிலேயே இரவின் நான்கு ஜாமங்களிலும் முறைப்படிப் பூஜை செய்ய வேண்டும், வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தல் கூடுதல் சிறப்பாகும். ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூஜிக்க வேண்டும் இவை உங்களால் முடியவில்லை எனில் கோவில்களுக்கு அபிஷேக பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். சிவ பெருமானின் சகஸ்ர நாமத்தை சொல்வதுடன், சிவ, ருத்ர, பசுபதி, நீலகண்டா, மகேஸ்வரா, ஹரிகேசா, விருபாக்ஷா, சாம்பு, சூலினா, உக்ரா,பீமா, மகாதேவா ஆகிய 12 பெயர்களை உச்சரித்து பூக்களால் அர்ச்சிக்க வேண்டும்.

அன்றைய தினம் இரவு முழுவதும் நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்து மறுநாள் அதிகாலையில் குளித்து கோவிலுக்குச் சென்று விரதத்தை முடிக்கலாம். இந்த விரதத்தை நிறைவு செய்த பின்னர் நீங்கள் உணவு உட்கொள்ள வேண்டும்.

இரவு முழுவதும் உங்களால் உணவு உண்ணாமல் இருக்க முடியவில்லை என்பவர்கள் ஒவ்வொரு ஜாமத்திற்கான பூஜை முடியும் போது தண்ணீர் அல்லது பழங்கள் சாப்பிடலாம்.

 

இந்த சிவராத்திரியின் முக்கிய நோக்கமே வெளியுலக ஆசாபாசங்களில் மனதை அழுந்த விடாமல் மனதை அமைதியாக வைத்திருப்பது, அதே போல பொறாமை,காமம்,குரோதம்,மதம் முதலான உணர்வுகளிலிருந்து தப்பி விழிப்புடன் இருக்கவேண்டும். இந்த உண்ணா நோன்பிருந்து இறைவன் ஒருவனையே வேண்டிக் கிடப்பதால் உங்களது ஞானப்பசி நிறைவேறும்.