பொய்த்துப்போன பொங்கல் சொந்த ஊருக்கு போலாமா வேண்டாமா ஒரு அறிவிப்பிற்காக டி.வி முன்

பொய்த்துப்போன பொங்கல்...சொந்த ஊருக்கு போலாமா வேண்டாமா? அந்த ஒரு அறிவிப்பிற்காக டி.வி முன் காத்திருக்கும் மக்கள்  

சென்னை : கடந்த 8 நாட்களாக தொடரும் போக்குவரத்து ஊழியர்களின் தொடர் வேலைநிறுத்தம் காரணமாக பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லலாமா வேண்டாமா என்று கவலையில் ஆழ்ந்துள்ளனர் தமிழக  மக்கள். 

இது நாள் வரை தனியார் பேருந்துகளில் வசூலிக்கப்பட்டு வந்த   கட்டணத்தை விட 4 மடங்கு கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.இது அனைத்தும் தெரிந்தும் அரசு மெத்தனப்போக்கை கையான்டுவருவதால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

ஆண்டு முழுவதும் குடும்ப சூழல்,பொய்த்துப்போன விவசாயம்,பணி    நிமித்தமாக சொந்த உரை விட்டு வெளியூர்களில் தங்கி வேலை செய்துவந்த போதும், பண்டிகை நாட்களில் சொந்த ஊர் சென்று குடும்பத்தினர், உறவினர்களுடன் நேரத்தை கழிப்பதையே பலரும் விரும்புவர். 

அதிலும்,தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நகரங்களை விட கிராமங்களிலேயே களை கட்டும். இந்த 3 நாள் விடுமுறை கொண்டாட்டத்திற்காக ஆண்டு முழுவதும் காத்திருக்கின்றனர் சொந்த பந்தத்தை விட்டு வேலை நிமிர்த்தமாக வெளியூரில் வசித்துவரும் ஏராளமான மக்கள்.

சொந்த பந்தங்களுடன் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு பயணிக்கும் மக்கள் முன்கூட்டியே எல்லா திட்டங்களும் போட்டுவிடுவர்.இவர்களுக்கு ஏதுவாக பேருந்து, ரயில் முன்பதிவுகளும் முன்கூட்டியே அறிவிக்கப்படும்.மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் அதற்க்கு ஏற்ப சிறப்பு பேருந்து, ரயில்கள் இயக்கப்படும் ஆனால் இந்த ஆண்டு அனைத்துமே மக்களை கைவிட்டுள்ளது. 

பொங்கல் பண்டிகை என்றாலே குதூகலிக்கும் லட்சக்கணக்கான மக்கள் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்வது வழக்கம்.தற்போது  போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் அன்றாட போக்குவரத்துக்கே அல்லாடும் நிலையில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமா என்ற கேள்விக்கு இன்னும் முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை.

இரு தினங்களுக்கு முன்பே தொடங்க வேண்டிய சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு இந்த ஆண்டு நடைபெறவேயில்லை. மாறாக சிறப்பு பேருந்துகளுக்கு மக்கள் யாரும் முன்பதிவு செய்ய வேண்டாம்,முன்னதாக அறிவிக்கப்பட்ட 5 இடங்களில் காத்திருந்து அவர்கள் செல்லவேண்டிய இடத்திற்கு பயணிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. உள்ளூரில் பயணிக்கவே உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணிக்கும் மக்கள்.

தற்காலிக ஓட்டுநர்களால் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளில் எப்படி பயணிப்பது என அஞ்சுகின்றனர்.மேலும், முன்பதிவு செய்தாலே அரசுப் பேருந்துகளில் பயணிக்க மக்கள் கடும் சிரமத்தை சந்திப்பர்,இந்த நிலையில்,தற்போது முன்பதிவின்றி பேருந்தில் பயணிக்கலாம் என்று அரசு கூறியுள்ளதால் நிச்சயம் மக்களுக்கு இந்த பயணம் ஆபத்தானதாகவே இருக்க வாய்ப்பு உள்ளது.

சரி தனியார் பேருந்தில் பயணிக்கலாம் என்றல் பேருந்து ஸ்டிரைக்கை பயன்படுத்தி அவர்கள் 4 மடங்கு வரை கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். வழக்கமாக பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகள் கட்டண கொள்ளையில் ஈடுபடுவது வழக்கமான விஷயம் தான். அப்போதெல்லாம் அதிக கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்து வந்தது.ஆனால் தற்போது இதை அரசு கவனத்தில் கொள்ளவில்லை.

அதிக அளவில் பயணிகள் வந்தால் அதற்கு ஏற்ப டிக்கெட் விலையை மாற்றிக் கொள்வதற்கான உரிமையை தனியார் பேருந்து நிறுவனங்களுக்கு யார் தந்தது என்ற கேள்வியும் எழுகிறது. இந்நிலையில்,இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் சொந்த ஊருக்கு போவதை வேண்டாமா என குழப்பியுள்ள மக்கள், போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் இன்றாவது முடிவுக்கு வருமா என்று டிவி சேனல்களையே பார்த்து காத்திருக்கின்றனர்.

ஜூலி ஹீரோயினாக நடிக்கும் படத்தின் பெயர் என்ன தெரியுமா