காதலியை ஆடம்பர திருமணம் செய்யவே இதை எல்லாம் செய்தேன்! துணை நடிகரின் திடுக்கிடும் வாக்குமூலம்

தமிழகத்தில் வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்தது நான் தான் எனவும் காதலியை ஆடம்பரமாக திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காகவே இப்படி செய்தேன் என்று துணை நடிகரான ரவி பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை புறநகர் பகுதிகளான சேலையூர், பெருங்களத்தூரில் கடந்த சில மாதங்களாக பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு, அந்த வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கும்பல் ஒன்று கொள்ளையடித்து வந்தது.

இதனால் இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை விரைவில் பிடிக்கும் படி சென்னை மாநகர கமிஷனர் விஸ்வநாதன் அளித்த உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கொள்ளையடிக்கப்பட்ட வீடு ஒன்றில் திருடப்பட்ட செல்போனை கொள்ளையர்கள் பயன்படுத்தி வருவது பொலிசாருக்கு தெரியவந்தது.

இதனால் அந்த செல்போனின் சிக்னல்களை வைத்து தனிப்படை பொலிசார் தீவிர விசாரணை நடத்தினார். செல்போன் சிக்னலை வைத்து பொலிசார் நடத்திய விசாரணையில் ரவி(30) என்பவர் கைது செய்யப்பட்டார்.

அதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அதில், நான் ஒரு சினிமா துணை நடிகர் எனவும், தெய்வ மகள், வம்சம், காலபைரவன் போன்ற பல சீரியல்களிலும் நடித்துள்ளேன்.

நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன், அவரை திருமணம் செய்யவுள்ளேன். திருமண செலவுக்காக இதுபோல் சென்னை புறநகர் பகுதிகளில் பூட்டி கிடக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க தொடங்கினேன். இப்படி கொள்ளையடித்த நகைகள் மூலம் பணம் சேர்த்து எனது காதலியை ஆடம்பரமாக திருமணம் செய்ய திட்ட மிட்டேன் என்று கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து இவருக்கு உடந்தையாக இருந்த அவருடைய நண்பரான பம்மல் மூங்கில் ஏரி மசூதி தெருவைச் சேர்ந்த கிருஷ்ணபெருமாள்(31) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதாகவும், பெருங்களத்தூர் பகுதிகளில் உள்ள வீடுகளில் கொள்ளையடித்த 43 பவுன் நகைகளை ரவியிடமிருந்து பொலிசார் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.