முந்தானையில் கழுத்தை நெரித்து கொன்றது ஏன்? விசாரணையில் திடுக்கிடும் வாக்குமூலம்

தமிழகத்தில் பண நெருக்கடி காரணமாக பெண்ணை கொலை செய்தேன் என கைதான தொழிலாளி வாக்குமூலம் கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னிமலை யூனியன், முகாசிபிடாரியூர் ஊராட்சி காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் தனசேகர் (24). இதே பகுதியில் வசித்து வரும் தம்பதி ஆறுமுகம்-சிந்து(27).

ஆறுமுகம் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்திலும், சிந்து சென்னிமலையில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்திலும் பணியாற்றி வந்துள்ளனர்.

இந்நிலையில் தனசேகரிடம் சிந்துவின் கனவர் ஆறுமுகம் குடும்ப செலவிற்காக 5 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டுள்ளார்.

இதையடுத்து நேற்று முன்தினம் ஆறுமுகத்தை தன சேகர் தொடர்பு கொண்ட போது, தோப்பு பாளையத்தில் நண்பர் ஒருவர் பணம் தருவதாக கூறியிருப்பதாகவும் நீங்களோ அல்லது சிந்துவோ நேரில் வரவேண்டும் என கூறியுள்ளார்.

இதனால் ஆறுமுகம் சிந்துவை அழைத்துச் சென்றுள்ளார். அதன் படி இரு சக்கர வாகனத்தில் இருவரும் சென்றுள்ளனர்.

இதைத் தொடர்ந்து ஆறுமுகத்தை சந்தித்த தனசேகர் ரூ. 5 ஆயிரத்தை கொடுத்து விட்டு சிந்துவை பனியம்பள்ளி பிரிவில் பஸ் ஏற்றி விட்டேன் என கூறியுள்ளார்.

ஆனால் சிந்து வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை, மொபைல் போன் ஸ்விட்ச் ஆப்பில் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த ஆறுமுகம் தனசேகரிடம் கேட்ட போது, முன்னுக்கு பின்னாக பதில் கூறியதால், அவரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

பொலிசார் நடத்திய விசாரணையில் சிந்துவை பண நெருக்கடி காரணமாக கொலை செய்ததாகவும், அவரை ஊத்துக்குளி அருகே உள்ள அரசன்ன மலை வனப்பகுதியில் மறைத்து வைத்ததாக கூறியுள்ளார்.

 

 

சிந்துவின் உடலை கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, தனசேகரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அவர், எனக்கு சரியான வேலை இல்லாததால் பண நெருக்கடி ஏற்பட்டது. அந்த சமயத்தில் ஆறுமுகம் என்னிடம் பணம் கேட்டார். அதனால் ஒருவர் வட்டிக்கு பணம் கொடுப்பதாக கூறினேன்.

அவர் கூறியபடி பணம் வாங்க சிந்துவை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற போது, அவளது கழுத்தில் கிடந்த நகையை பார்த்ததும் என் மனது மாறியது.

இதனால் விஜயமங்கலம் ரெயில் நிலையம் அருகே சென்ற போது அங்கிருந்த வனப்பகுதியில் சென்றேன். அப்போது பைக்கில் இருந்து இறங்கிய சிந்து இங்கே எதற்காக என்னை அழைத்து வந்தாய் தகராறு செய்தாள்.

அப்போது அங்கே கிடந்த கல்லை எடுத்து சிந்துவின் மண்டையில் அடித்தேன். அப்போதும் அவள் உயிர் போகாததால், சிந்துவின் முந்தானையை எடுத்து கழுத்தை இறுக்கி கொலை செய்தேன்.

அதன் பின் அவள் கழுத்தில் இருந்த 5 பவுன் தாலிக் கொடியை கழற்றி வந்து எனது உறவினர் பெயரில் தனியார் வங்கியில் 60 ஆயிரம் ரூபாய்க்கு அடமானம் வைத்தேன். பின்னர் அதே பணத்தில் 5 ஆயிரம் ரூபாயை சிந்துவின் கணவரிடம் கொடுத்தேன்.

எனக்கு இருந்த கடன்களை முழுவதும் அடைத்தேன். சிந்துவின் கணவரிடம், சிந்துவை பஸ் ஏற்றி விட்டதாக பொய் சொன்னேன். எனக்கு ஏற்பட்ட பண நெருக்கடியால் தான் கொலை செய்தேன் என்று கூறியுள்ளார்.

கொலை செய்யப்பட்ட சிந்துவுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. அதுமட்டுமின்றி தனசேகர் சிந்துவுக்கு தம்பி முறை எனவும் கூறப்படுகிறது.