கனடாவின் தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய சவூதி! வருத்தம் தெரிவித்த கனடா அமைச்சர்

கனடா நாட்டின் தூதரக அதிகாரிகளை சவூதி அரேபியா வெளியேற்றியுள்ளதுடன், கனடாவில் உள்ள தனது தூதரக அதிகாரிகளையும் திரும்ப அழைத்துக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவூதி அரேபியாவில் மனித உரிமைகள் மீறப்படுவதாக கனடா குற்றஞ்சாட்டியது. மேலும் சிறை வைக்கப்பட்டுள்ள மனித உரிமை ஆர்வலர்களை விடுவிக்குமாறும் வலியுறுத்தியது.

அதனைத் தொடர்ந்து, ரியாத் நகரில் இருக்கும் கனடா தூதரக அதிகாரிகளை 24 மணிநேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு சவூதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், கனடாவில் உள்ள தங்கள் நாட்டு தூதரக அதிகாரிகளையும் நாட்டிற்கு திரும்பி வருமாறு அழைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து, சவூதியில் இருந்து கனடாவிற்கு செல்ல இருந்த நேரடி விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், இதுகுறித்து கனடாவின் வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் கூறுகையில், ‘சவூதி அரேபியாவின் நடவடிக்கைகள் ஆழ்ந்த கவலை அளிப்பதாக உள்ளது’ என தெரிவித்துள்ளது.