கனடா பிரதமரின் புகைப்படமா இது? சர்ச்சையில் சிக்கிய சர்வதேச ஊடகம்

கனடா பிரதமரின் புகைப்படம் என்று நினைத்து வேறொரு நபரின் புகைப்படத்தை சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது. டெய்லி மெயில் எனும் ஊடகமே தனது இணையதளத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடூவின் இளமைக்காலப் புகைப்படம் என்று குறித்த புகைப்படத்தைத் தரவேற்றியுள்ளது.

ஆனாலும் குறித்த புகைப்படம் இன்னொரு மனிதரின் புகைப்படம் என்றும் டெய்லி மெயில் அதனைத் தவறாக பயன்படுத்தியுள்ளது என்றும் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

 

 

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடூ ஒரு கெயிஷா பெண்ணாக (ஆடல் பாடல்களில் மற்றவர்களை மகிழ்விக்கும் பெண்) வேடம் தரித்த புகைப்படம் என்றே டெய்லி மெயில் செய்தி வெளியிட்டது.

குறித்த புகைப்படத்துக்குச் சொந்தக்காரர் பிரையன் க்ரெஸ்கோ எனும் எழுத்தாளர் என்று சொல்லப்பட்டுள்ளது. இதனை குறித்த எழுத்தாளரே தனது டுவிட்டர் பக்கத்தினூடாக நிரூபித்திருக்கிறார்.

 

 

குறித்த எழுத்தாளர் கனடா பிரதமருடன் வலுவான தோற்ற ஒற்றுமையினைக் கொண்டிருப்பதே குறித்த சர்ச்சைக்குக் காரணம் என சொல்லப்பட்டிருக்கிறது. கடந்த 1990ஆம் ஆண்டளவில் ஒகியோவிலுள்ள ஒபர்லின் கல்லூரியில் நடந்த நிகழ்வு ஒன்றின்போதே அவர் இந்த வேடத்தினைத் தரித்துள்ளதாக சொல்லப்பட்டிருக்கிறது.