திமுக கட்சியிலிருந்து கொண்டு இப்படி பேசலாமா துரைமுருகன்?

வேலூர்: வேலூர் லோக்சபா தொகுதியில் போட்டியிடும், தனது மகன் கதிர்வேல் ஆனந்த்திற்கு ஆங்கிலப் புலமை இருப்பதால் அவரை லோக்சபாவிற்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என பேசியுள்ளார் துரைமுருகன்.

நாடாளுமன்றம் செல்ல ஹிந்தி அல்லது ஆங்கிலம் தெரிந்திருப்பது உதவும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆம்.. சொன்னது, சாட்சாத், திமுகவின் பொருளாளர் துரைமுருகன்தான்.

ஓடி வந்த இந்தி பெண்ணே கேள். நீ தேடி வந்த கோழையுள்ள நாடிதல்லவே என்ற பாடலை முழங்கிய கட்சியின் பொருளாளர் இப்படி சொல்லியுள்ளதை அந்த கட்சி தொண்டர்களே ரசிக்கவில்லை என்பதை சமூக வலைத்தள கருத்துக்கள் மூலம் அறிய முடியும்.இந்தி எதிர்ப்பு

1938களில் இந்திக்கு எதிராக தமிழகம் பெரும் போராட்டத்தை கண்டது. ராஜாஜி, 1937ல் பள்ளிகளில் கட்டாய இந்தியைக் கொண்டு வந்தார். அதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. எதிர்ப்பின் தீவிரத்தை உணராத ராஜாஜி, பள்ளிக்கூடங்களில் முதல் கட்டமாக 1ம் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பு வரை கட்டாயமாக இந்தியை கற்பிக்க வேண்டும் என்று அவ்வாண்டு ஏப்ரல் 21ம்தேதி ஒரு உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து மிகப்பெரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

பெரியார், அண்ணா

பெரியார், அண்ணா என பல தலைவர்களும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைதாகிச் சிறை சென்ற தாளமுத்து, நடராசன் இருவரும் சிறையிலேயே மரணம் அடைந்தார்கள். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பிரச்சினை தீவிரமானதால்,1940 பிப்ரவரி 21ம்தேதி கட்டாய இந்தி உத்தரவு ரத்து செய்யப்பட்டது. குறிப்பிட்ட காலம் இந்தி ஒதுங்கியிருந்த நிலையில், மீண்டும் 1965ல் பிரச்சினை வெடித்தது.

மீண்டும் போராட்டம்

இந்தியை அரசு மொழியாக்கும் அப்போதைய மத்திய அரசின் செயல்பாட்டை கண்டித்து1965ம் ஆண்டு தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் பெரும் விஸ்வரூபம் எடுத்தது.மாநிலம் முழுவதும் பெரும் கலவரமாக பரவிய இந்தி எதிர்ப்பு போராட்டம் காவலர்களால் அடக்க முடியாத அளவில் இரண்டு மாதங்கள் தொடர்ந்து நடந்தது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அப்போதைய இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் அரசுப்பணிகளில் இணைமொழியாக இருக்கும் என்ற உறுதிமொழி அளித்தார்.

ஆட்சி மாற்றம்

இந்தி எதிர்ப்புப் போராட்டம் மாநில அரசுகளின் அரசியல் மாற்றங்களுக்கும் வித்திட்டது. 1967ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க பெரும் வெற்றி கண்டது. இந்தத் தோல்விக்குப் பிறகு, இந்தியை திணிக்க நினைத்த காங்கிரசால் மீண்டும் தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்ற இயலவில்லை. "1938-ம் ஆண்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டமும், அதன்பின் 1965-ம் ஆண்டு தமிழகமே இந்திக்கு எதிராக கிளர்ந்தெழுந்த வரலாறும் கழகத்திற்கே பெருமை சேர்ப்பதாகும்" என்று கருணாநிதியே பல முறை கூறியுள்ளார்.

வெற்றிக்காக பேச்சு

இப்படியான வரலாறு கொண்ட ஒரு கட்சியின் பொருளாளர் துரைமுருகன், ஏறத்தாழ 'இந்தியின் அவசியம்' என்ற 'தலைப்பில் உரையாற்றியுள்ளது' சரியா என கேட்கிறார்கள் நீண்ட கால திமுக அனுதாபிகள். தனது மகன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசிவிடுவதா என்று ஆதங்கப்படுகிறார்கள் அவர்கள்.

மொழியா, அறிவா

ஆங்கிலமோ, இந்தியோ ஒரு மொழி மட்டுமே, அதை ஒரு அறிவு என்பதை போல துரைமுருகன் கூறிய கருத்து கல்வியாளர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்த மொழியில் பேசினாலும் அதை மொழி பெயர்க்க கருவிகள் உள்ளன. எனவே தங்கள் தாய்மொழியில் பேசுவதில் எந்த எம்.பிக்கும் தடை கிடையாது. இந்த யதார்த்தத்தை மறைத்துவிட்டு ஆங்கிலத்தை ஒரு தகுதியாக துரைமுருகன் முன்னிறுத்தியது சரியல்ல என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.