நியூசிலாந்து நாட்டில் துப்பாக்கிகளுக்கு தடை விதிக்கும் சட்டம் அடுத்த மாதம் அறிமுகம்

நியூசிலாந்து மசூதிகளில் நடத்தப்பட்ட கொடூர தாக்குதலையடுத்து, பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் துப்பாக்கிகளுக்கு தடை விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றபோது, மர்ம ஆசாமிகள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கர தாக்குதலில் , 50 பேர் உயிரிழந்தனர் . மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே இருந்த நியூசிலாந்து சட்டப்படி ஒருவர் 16 வயதிலேயே சாதாரண துப்பாக்கியையும், 18 வயதில் தானியங்கி துப்பாக்கியையும் வாங்க முடியும். ஆகவே , நாட்டில் நடைமுறையில் இருக்கும் துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என மந்திரி சபை கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து 10 தினங்களுக்குள் துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவெடுக்கப்படும் என பிரதமர் கூறியிருந்தார். நேற்றைய தினம் இந்த விவகாரம் தொடர்பாக ஜெசிந்தா பேட்டியளித்தார்.

அப்போது அவர் நியூசிலாந்தில் பயன்பாட்டில் இருக்கும் ராணுவத்தில் உள்ளதை போன்ற தானியங்கி ரக துப்பாக்கிகள், தாக்குதல் துப்பாக்கிகள், மற்றும் தானியங்கி துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் மேகசின்கள், உதிரிபாகங்கள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படும். சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், கடந்த வெள்ளி அன்று நடத்தப்பட்ட தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட துப்பாகிகள் நாடு முழுவதும் தடை செய்யப்படும். இந்த தடை அடுத்த மாதத்தில் இருந்து அமல் படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.