உலகையே திரும்பி பார்க்க வைத்த இங்கிலாந்து குடும்பம்: கின்னஸ் சாதனை

இங்கிலாந்து நாட்டில் உள்ள தம்பதியினருக்கு இருவேறு நிறத்திலான இரட்டை குழந்தைகள் அடுத்தடுத்து பிறந்துள்ள அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது.இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டீன் டுரன்ட் மற்றும் அலிசன் ஸ்பூனர் (37) தம்பதியினருக்கு முதல் பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்திருக்கிறது. இதனை பார்த்ததும் அங்கிருந்த மருத்துவர்கள் அனைவருமே வியந்து போயிருக்கின்றனர்.

அதில் லாரன் என்கிற குழந்தை அவரது தாய் அலிசன் போல வெள்ளை நிறத்தில், ஊதா கலர் கொண்ட கண்களுடன் பிறந்துள்ளார். அதேபோன்று ஹேலே என்கிற மற்றொரு குழந்தை அவருடைய தந்தை டீன் போல பிறந்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் இந்த தம்பதியினருக்கு மீண்டும் மியா மற்றும் லியா என்கிற இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இவர்களும் அப்படியே தங்களுடைய அக்காக்களை போல இருவேறு நிறங்களில் பிறந்துள்ளனர்.

பொதுவாக உலகிலேயே இதுபோன்ற அதிசயம் நடப்பது மிகவும் அரிதான விஷயம் என மருத்துவர்கள் சொல்லி வருகின்றனர். இத்தகைய அதிசயத்தின் காரணமாக குடும்பத்தினர் விரைவில் கின்னஸ் சாதனை படைக்க உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. தம்பதியினரின் மூத்த இரட்டை குழந்தைகள் இருவரும் சமீபத்தில் தங்களுடைய 18 வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். இந்த விஷயம் குறித்து பேசியுள்ள சகோதரிகள், எங்கள் இருவரை யார் பார்த்தாலும் இரட்டை சகோதரிகள் என்பதை நம்ப மாட்டார்கள். நண்பர்கள் என சொல்வார்கள். நாங்கள் பள்ளி சேர்ந்த புதிதில் பெரும்பாலான மாணவர்கள் எங்களை கேலி செய்வார்கள். ஒருவரை வெள்ளை பிஸ்கட் என்றும், மற்றொருவரை சாக்லேட் பிஸ்கட் என்றும் சொல்வார்கள்.

ஆனால் நாங்கள் அதை ஒருபோதும் பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை. பள்ளி ஆய்வகத்தில் எங்கள் இவருடைய புகைப்படமும் உள்ளது . இதனை பார்க்கும் மாணவர்கள் ஆச்சர்யமடைவார்கள். இதுபற்றி இருவரின் தாய் அலிசன் பேசுகையில், என்னுடைய அதிசய குழந்தைகளுக்கு 18 வயதாகிவிட்டது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவர்கள் சிறந்த நண்பர்களாக இருக்கிறார்கள். வித்தியாசமாகத் தோன்றுவதை தவிர்த்து, எல்லா வழிகளிலும் ஒன்றாக செயல்படுகிறார்கள் என கூறியுள்ளார்.