பாராட்டு விழாவும் நடத்தி, இளையராஜாவுக்கு ரூ. 3.5 கோடி பணமா..? விஷால் மீது போலீசில் புகார்

சென்னை : தயாரிப்பாளர் சங்கத்தின் பணம் ரூ. 7 கோடியை கையாடல் செய்ததாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மீது எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன், கே.ராஜன் ஆகியோர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முறைகேடு நடந்துள்ளது, பொதுக்குழுவைக் கூட்டவில்லை, இளையராஜா நிகழ்ச்சி எதிர்ப்பு என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மீது சில தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு பூட்டு போடப்பட்டது. அதனை உடைக்க முயன்ற விஷால் கைது செய்யப்பட்டார். பின்னர் சீல் வைக்கப்பட்ட கட்டிடம், நீதிமன்ற உத்தரவிற்குப் பின் திறக்கப்பட்டது எல்லாம் ஊரறிந்த கதை தான்.

இந்நிலையில் அடுத்தமாதம் இளையராஜா நிகழ்ச்சியை நடத்த விஷால் ஏற்பாடுகளை செய்து வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்த சூழலில் விஷால் மீது எஸ்.வி.சேகர், கே.ராஜா, ஏ.எல்.அழகப்பன், கதிரேசன், சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் சென்னை காவல் ஆணையரிடம் கையாடல் புகார் தெரிவித்துள்ளனர். அதில் அனுமதியின்றி தயாரிப்பாளர் சங்க வைப்பு நிதி ரூ. 8.45 கோடி பணத்தை விஷால் எடுத்து செலவழித்துள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை விஷாலும் ஒப்புக் கொண்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பின்னர் செய்தியாளர்களை அவர்கள் கூட்டாகச் சந்திந்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது, "தயாரிப்பாளர் சங்க வைப்புநிதியான ரூ. 7 கோடியை விஷால் தன்னிச்சையாக செலவு செய்ததாக நாங்கள் கூறி வந்தோம். விஷாலே கணக்கு வழக்குத் தொடர்பாக ஒரு கடிதம் கொடுத்துள்ளார். அதில், சங்கத்திலிருந்து ரூ. 8.75 கோடி பணத்தை எடுத்துள்ளோம் என அவரே கூறியுள்ளார்.

சங்கத்தின் பணத்தை அனுமதியின்றி எடுத்து விட்டு, திரும்பி வைத்தாலும் அது கையாடல் தான். ஆகையால் அவர் மீதும், மற்ற நிர்வாகிகள் மீதும் போலீசில் புகார் அளித்துள்ளோம்.

பாராட்டு விழாவும் நடத்தி, இளையராஜாவுக்கு மூன்றரை கோடி ரூபாய் பணமும் கொடுப்பது ஏன்? விஷாலின் நண்பர் ரமணா சங்கத்து உறுப்பினரே இல்லை, அவரிடம் பொறுப்பை ஒப்படைத்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அந்த நிகழ்ச்சிக்கான தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை வழங்கியதில் வெளிப்படைத்தன்மை இல்லை

இளையராஜா நிகழ்ச்சியை நாங்கள் தடுக்க விரும்பவில்லை. ஆனால் முறைப்படி செய்யுங்கள் என்றுதான் கூறுகிறோம். சங்கத்திலிருந்து எடுத்த பணத்தை திரும்ப வையுங்கள். அதோடு உடனடியாக பொதுக்குழுவைக் கூட்டி தேர்தலை அறிவியுங்கள்" என அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.