விஜய் ரசிகர்கள் மீது புகார்... கருணாகரனை திருப்பி அனுப்பிய போலீஸ்!

சென்னை: விஜய் ரசிகர்கள் மீது புகார் அளிக்க சென்ற நடிகர் கருணாகரனை போலீசார் திருப்பி அனுப்பினர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் பேசிய விஜய், உசுப்துரன்கிட்ட உம்முன்னும், கடுப்பேத்துரவன்கிட்ட கம்முன்னும் இருக்கனும். அப்போ தான் வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும் என ஒரு வாக்கியத்தை கூறினார்.

இதுபற்றி தனது சமூக வலைதளப்பக்கத்தில் கருத்து தெரிவித்த நடிகர் கருணாகரன், "இந்த அட்வைஸ் மற்றவர்களுக்கு தானா. உங்கள் ரசிகர்களுக்கு இல்லையா" என கேள்வி எழுப்பினார். அவ்வளவு தான், தானாக வந்து ஒருத்தன் சிக்கிட்டான்டானு கிளம்பிய விஜய் ரசிகர்கள், கருணாகரனை ஒருபிடிபிடித்துவிட்டனர்.

இதனால் கோபம் அடைந்த கருணாகரன், விஜய் ரசிகர்கள் மீது புகார் அளிக்க முடிவு செய்து சென்னை காவல் ஆணையர் அலுவலகம் சென்றார். ஆனால் அவர் எழுத்துப்பூர்வமாக புகார் மனு எதையும் எடுத்து செல்லவில்லை.

விஜய் ரசிகர்கள் தன்னை பற்றி அவதூறாக பேசியதற்கான ஆதரங்களை மட்டும் அவர் போலீசாரிடம் காட்டினார். ஆனால் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கும்படி கருணாகரனிடம் போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டார். விரைவில் உரிய ஆதாரங்களுடன் சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க உள்ளதாக கருணாகரன் தெரிவித்துள்ளார்.