கார் கண்ணாடியை உடைத்து பர்ஸ் திருட்டு டிரைவிங் லைசென்ஸை கொரியரில் திருப்பி அனுப்பிய திருடன்

புனே: திருடிச் சென்ற பர்ஸில் இருந்த டிரைவிங் லைசென்ஸை அதில் இருந்த முகவரிக்கே கொரியர் மூலம், திருடன் திருப்பி அனுப்பிய சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் வனோவ்ரியைச் சேர்ந்த பெண் ஜவுளி வியாபாரி ஸ்வப்னா டே. பிரபல தொழிலதிபரான ஸ்வப்னாவுக்கு சமீபத்தில் அவரது இளைய மகன் விலையுயர்ந்த கார் ஒன்றைப் பரிசாக அளித்துள்ளார்.

கடந்த மாதம் 17ம் தேதி அந்தக் காரில் தனது கடைக்குச் சென்ற ஸ்வப்னா, இரவு கடையில் இருந்து கிளம்பி ரேஸ் கோர்ஸ் பகுதிக்கு சென்றுள்ளார். தினமும் இவ்வாறு அவர் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கமாம். ஆனால், வழக்கமாக இருசக்கர வாகனத்தில் வரும் ஸ்வப்னா, அன்று மகன் பரிசளித்த காரில் சென்றுள்ளார்.

தனது பர்ஸ், ஐபேட் போன்றவற்றை காரிலேயே வைத்துவிட்டு, செல்போனை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு அவர் சிறிது நேரம் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். பின்னர் காருக்கு திரும்பிய ஸ்வப்னாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது காரின் பின்புறக் கண்ணாடி உடைக்கப்பட்டு, அவரது பர்ஸ் திருடு போயிருந்தது. ஆனால், ஐபேட் கார் சீட்டிற்குள் மறைவாகக் கிடந்ததால், திருடிய நபர் அதனைக் கவனிக்கவில்லை.

உடனடியாக இந்த திருட்டு சம்பவம் குறித்து வனோவ்ரி காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். திருடு போன பர்ஸில் ரூ. 1,500 ரொக்கப்பணமும், தனது டிரைவிங் லைசென்ஸும் இருந்ததாக அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த வியாழனன்று அவரது பழைய வீட்டு முகவரிக்கு கொரியர் ஒன்று வந்துள்ளது. அதனை அவ்வீட்டின் அருகில் வசிப்போர் ஸ்வப்னாவிடம் கொண்டு வந்து அளித்துள்ளனர். அனுப்பியவரின் முகவரி இல்லாமல் வந்திருந்த அந்தப் பார்சலைத் திறந்து பார்த்த ஸ்வப்னாவுக்கு இன்ப அதிர்ச்சி. ஆம், அதில் திருடி போன பர்ஸில் இருந்த அவரது டிரைவிங் லைசென்ஸ் இருந்தது.

பர்ஸை திருடிய நபர், அதில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு அதனை தூக்கி எறியாமல், அதில் இருந்த டிரைவிங் லைசென்ஸைப் பார்த்து மனமிறங்கியுள்ளார். எனவே, அதில் இருந்த முகவரிக்கே அதை அவர் கொரியரில் அனுப்பி வைத்துள்ளார். ஆனால், அது ஸ்வப்னா முன்பு குடியிருந்த வீட்டு முகவரி. தற்போது அவர் வேறு வீட்டிற்கு மாறிவிட்டார். ஆனபோதும், அக்கம்பக்கத்தார் உதவியுடன் அந்த பார்சல் பத்திரமாக ஸ்வப்னாவிடம் வந்து சேர்ந்து விட்டது.

ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் காணாமல் போனதால், டூப்ளிகேட்டிற்கு விண்ணப்பிக்க திட்டமிட்டிருந்தார் ஸ்வப்னா. இந்த சூழ்நிலையில் திருடு போன தனது பழைய ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸே மீண்டும் கிடைத்து விட்டதால் அவர் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

திருட்டிலும் ஒரு நேர்மையாக, பர்ஸில் இருந்த பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு டிரைவிங் லைசென்ஸின் மதிப்பு அறிந்து அதனை கொரியரில் திருப்பி அனுப்பியுள்ளான் அந்த திருடன்.

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ