விளம்பி தமிழ் வருட புத்தாண்டு 2018 -19 ரிஷபம் ராசிக்கு பலன்கள் பரிகாரங்கள்

சென்னை: விளம்பி வருடம் 14.4.2018 அன்று கிருஷ்ண பட்சம், திரயோதசி திதி, சனிக்கிழமை காலை 8.13 மணிக்கு உத்திரட்டாதி நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறக்கிறது. ஹேவிளம்பி வருடத்தை விட விளம்பி வருடம் மக்களிடையே மகிழ்ச்சியையும் பணவரவையும் தருவதாக அமையும்.

புத்தாண்டு பிறக்கும் போது ரிஷப லக்னம் மேஷத்தில் சூரியன், சுக்கிரன், கடகத்தில் ராகு, துலாமில் குரு, தனுசு ராசியில் செவ்வாய் சனி, மகரத்தில் கேது, மீனம் ராசியில் சந்திரன், புதன் அமர்ந்துள்ளனர். சந்திரனும் புதனும் சேர்ந்திருந்தால், இந்திரனைப்போல் வாழ்வான்' என்று ஒரு பழம் பாடல் இருக்கிறது. புத்தாண்டு சந்திரனும் புதனும் இணைந்திருக்க பிறக்கிறது.

குருபகவானின் வீடான மீன ராசியிலும், சனிபகவானின் நட்சத்திரமான உத்திரட்டாதியிலும் இந்த தமிழ் புத்தாண்டு பிறப்பதால் சித்தர்களின் ஜீவ சமாதிகளுக்குச் சென்று வழிபடலாம். ரிஷபம் ராசிக்காரர்களுக்கு விளம்பி ஆண்டு எப்படி இருக்கும் என பார்க்கலாம்.

பொறுமை, அழகியலும் கொண்ட புத்திசாலித்தனம் மிக்க ரிஷப ராசிக்காரர்களே!

இந்த விளம்பி தமிழ் புத்தாண்டு உங்களின் வேலை, தொழில் போன்ற அமைப்புகளில் எதிர்பாராத மாற்றங்களை ஏற்படுத்தும்.

சித்திரை தொடக்கம் முதல் புரட்டாசி வரை அதாவது 3.10.18 வரை குரு பகவான் 6 ஆ ம் வீட்டில் மறைந்து இருப்பதால், பணப்பற்றாக்குறை எப்போதும் இருக்கும் அதற்கேற்ப பணமும் வந்துகொண்டே இருக்கும். செலவுகள் செய்யும்போது கொஞ்சம் சிக்கனமாகச் செய்வது நல்லது.

4.10.18 முதல் வருடம் முடியும்வரை குருபகவான் 7வது வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்ப்பதால் பணப்பற்றாக்குறை தீரும். புரட்டாசி மாதத்திற்குப் பின்னர் தடை பட்ட சுப நிகழ்ச்சிகள் நடக்கத் தொடங்கும். திருமணம் கைகூடி வரும். குழந்தை பேறு ஏற்படும்.

கணவன் - மனைவிக்கிடையில் அன்னியோன்னியம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சீராகும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வராது என்று நினைத்த பணம் கைக்கு வந்து சேரும். வாங்கிய கடனைத் தந்து முடிப்பீர்கள்.

வருடம் பிறக்கும்போது செவ்வாயும் சனியும் 8 ஆம் வீட்டில் கூட்டணி அமைத்திருப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். வண்டி வாகனங்களை இயக்கும்போது விபத்து ஏற்படாமல், கவனமாகக் கையாள்வது நல்லது.

ஆண்டு முழுவதும் சனிபகவான் அஷ்டமச் சனியாகத் தொடர்வதால், அவ்வப்போது படபடப்பு, தூக்கமின்மை, மறைமுக எதிர்ப்புகள் வந்துபோகும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும்.

அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கும் வேலைப்பளு அதிகமாக இருக்கும். விருப்பம் இல்லாத ஊருக்கு மாற்றம் அல்லது துறைரீதியான தேவையில்லாத மாற்றங்கள் நடந்து உங்களை சங்கடப்படுத்தலாம். வீடு மாற்றம், தொழில் மாற்றம் போன்ற ஏதேனும் ஒன்று இப்போது நடக்கும்.

பங்குச்சந்தை முதலீடு, வட்டிக்கு பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. ரிஸ்க் எடுக்கும் தொழில்களில் கவனமுடன் இருப்பது நல்லது. புரட்டாசி மாதம் வரை வேலை, தொழில் விஷயங்களில் நிதானமாகவும் பொறுமையுடனும் இருப்பதன் மூலம் பாதகங்களை தவிர்க்கலாம்.

12.2.19 வரை ராகு 3 வீட்டிலும் இருப்பதால், மனதில் தைரியம் பிறக்கும். எதையும் சாமர்த்தியமாகச் சமாளிக்கும் திறமை ஏற்படும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். ராகு பின்னர் இரண்டாவது வீட்டிற்கு இடம் பெயர்கிறார். கேதுவும் இப்போது உள்ள ஒன்பதாவது வீட்டில் இருந்து உங்கள் ராசிக்கு 8வது வீட்டிற்கு இடம் மாறுகிறார் சனியோடு கேது இணைகிறார் ஆன்மீக பயணம் செய்யலாம்.

பொறுமையை கையாண்டால் நன்மைகள் அதிகம் நடக்கும். மேலும் நல்லவை அதிகம் ஏற்பட ஸ்ரீவில்லிபுத்தூர் ரங்கநாதரை மனதார வழிபட்டு பணியை தொடங்கலாம். வெண்மை நிற ஆடைகளை அதிகம் அணியலாம்.

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ