எத்தியோப்பியாவில் பேருந்து விபத்து 38 பேர் பரிதாபகரமாக பலி

எத்தியோப்பியாவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 38 பேர் பரிதாபகரமாக உயிரிழந்ததுடன் 10 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் அம்ஹாரா மாகாணத்தில் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

டெஸ்சி மற்றும் மெக்கானே சேலம் நகரங்களுக்கு மத்தியில் இந்த விபத்து ஏற்பட்டது. அதிவேகத்தில் சாலையைவிட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததால் பேருந்தின் ஒரு பகுதி முற்றிலும் சிதைந்தது.

விபத்து குறித்து தகவல் அறிந்த பொலிசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 28 ஆண்கள் 10 பெண்கள் என மொத்தம் 38 பேர் பரிதாபகரமாக உயிரிழந்ததாக அரசு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இறந்தவர்களில் பெரும்பாலானோர் உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் என தெரியவந்துள்ளது. 10 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.