எப்படியாவது எல்லா மக்களையும் கருணை கொலை செய்யுங்கள் அதிர்ச்சியை கிளப்பிய தமிழக கிராமம்

ஆற்று மணல் கொள்ளையில் முனைப்பு காட்டி வந்த நிலையில், தற்போது கிரஷர் மற்றும் குவாரிகளை வைத்து மக்களின் இயல்பு வாழ்கையை முடக்கியுள்ளது ஆளுங்கட்சி.

ரூ.1600 மதிப்புள்ள ஒரு லாரி மணலை வெளிச்சந்தையில் ரூ.30,000 முதல் ரூ.36,000 வரை விலைவைத்து மணல் கொள்ளையர்கள் விற்கின்றனர்.

இவ்வகையில் மட்டும் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.30,000 கோடி வரையிலும், கடந்த 15 ஆண்டுகளில் ரூ.4.50 லட்சம் கோடி அளவுக்கும் இழப்பு ஏற்படுகிறது.

இந்தப் பணம் முழுவதும் ஆட்சியாளர்களிடமும், மணல் கொள்ளையர்களிடமும்தான் சென்றடைகிறது.

அதைப்போலவே மணல் விற்பனை ஓய்ந்து போயுள்ளதால், கல் குவாரிகளிலும் கொள்ளை லாபம் பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

மக்கள் வாழும் பகுதிகளிலும், கிராமத்திற்கு அருகிலும் குவாரிகளுக்கு அனுமதி கொடுத்து இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கி விட்டனர்.

இந்தநிலையில், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுக்கா, இரூர், நாட்டார்மங்களம், ஊராட்சிக்கு உட்பட்ட கூத்தனூர் கிராமப் பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் பெரம்பலூர் கலெக்டர் அலுவலத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.

அதில், போராட்டக்காரர்களிடம் பேசினோம். நாட்டார்மங்களம், கூத்தூர், கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம்.

இப்பகுதியில் ஏற்கெனவே இயங்கிவரும் கல் குவாரிகளால் எங்கள் ஊரிலுள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அந்தக் குவாரிகளில் வெடிவைத்து பாறைகளைத் தகர்க்கும்போது, மிகப்பெரிய அதிர்வுகள் ஏற்படுவதுமட்டுமல்லாமல். பல பெண்களுக்கு கருச்சிதைகள் ஏற்படுகிறது.

மக்களில் பலருக்கு நோய் நொடிகள் அதிகரித்துகொண்டே இருக்கிறது. இதேநிலை நீடித்தால் சிலஆண்டுகளில் கூத்தனூர் கிராமமே அழிந்துவிடும்.

கல்குவாரியின் ஏலத்தை ரத்து செய்யுங்கள். இல்லையென்றால் மாவட்ட நிர்வாகமே எங்கள் மக்களைக் கருணைக் கொலை செய்து விடுங்கள்.

13-ம் தேதியில் ஏலம்விட்டால் ஒரு சில ஆண்டுகளில் அழியவுள்ள எங்கள் கிராமம், ஒருசில மாதங்களிலேயே அழிந்துவிடும்.

சில அதிகாரிகளின், சில முதலாளிகளின் சுயலாபத்துக்காக ஒருகிராமத்தையே அழிக்க நினைப்பது சரியா.

இதற்கு இந்த அதிகாரிகளும் துணை போவது சரியா. எங்களது கோரிக்கையை மீறி ஏலம்விட முடிவு செய்தால், தயவுசெய்து எங்கள் கிராம மக்களைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள்" என்று கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.