சீன முதியவரின் மலக்குடலில் சிக்கிய 100க்கும் அதிகமான மீன் எலும்புகள் ஆபரேசன் மூலம் அகற்றம்

பெய்ஜிங்: சீனாவில் முதியவர் ஒருவரின் வயிற்றில் இருந்து 100க்கும் மேற்பட்ட மீன் எலும்புகளை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர்.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஷோவ் ( 69). மீன் பிரியரான இவர் சமீபத்தில் சிறு மீன்களைப் போட்டு சூப் செய்து குடித்துள்ளார். சிறுமீன்கள் தானே என அலட்சியமாக மீன்களை அதன் எலும்புகளைப்(முட்களை) பிரித்து எடுக்காமல், அப்படியே சாப்பிட்டுள்ளார்.

இதனால், மறுநாள் அவருக்கு அடி வயிற்றில் வலி ஏற்பட்டது. நேரமாக நேரமாக அவருக்கு கடுமையான வலி உண்டாகவே, சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர்.

அப்போது, அவரது குடல் பகுதியில் 100க்கும் மேற்பட்ட மீன் எலும்புகள் இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதனைத் தொடர்ந்து இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பின், ஆசனவாய் மூலம் அந்த மீன் எலும்புகளில் பெரும்பாலானவற்றை மருத்துவர்கள் அகற்றினர்.

ஷோவ் சாப்பிட்ட மீன்களில் இருந்த எலும்புகள் ஜீரணம் ஆகாமல் வயிற்றின் குடல் பகுதியில் தங்கி விட்டதாகவும், தற்போது அவற்றில் முக்கால்வாசியை அகற்றி விட்டதாகவும் தெரிவித்துள்ள மருத்துவர்கள், இன்னும் சில எலும்புகள் அகற்றப்படாமல் இருப்பதாக கூறியுள்ளனர். தற்போது ஷோவ்வின் குடல் பகுதியில் வீக்கம் இருப்பதால் சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீதமுள்ள எலும்புகளை அகற்ற வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.