இலங்கையில் சிங்கள முஸ்லீம் இனத்தவர் மோதல் கண்டியில் ஊரடங்கு

கொழும்பு: இலங்கையில் உள்ள கண்டியில் முஸ்லீம் மற்றும் சிங்கள இனத்தவரிடையே பெரும் மோதல் மூண்டுள்ளது. கலவரம் பரவாமல் தடுக்க காவல்துறையினர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த மாதம் 27ஆம் தேதியன்று இலங்கையில் உள்ள அம்பாறை மாவட்டத்தில் முஸ்லீம்களின் வழிபாட்டு தலங்களில் தாக்குதல்கள் நடைபெற்றது. இதற்கு பதிலடி தரும் விதமாக முஸ்லீம் சமூகத்தினர் தாக்குதல் நடத்தினர்.

இதில் காயமடைந்த சிங்கள இளைஞன் மரணமடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த பெரும்பான்மை சமூகத்தினர் கலவரத்தில் ஈடுபட்டனர். முஸ்லீம்களின் வீடுகள், வர்த்தக நிறுவனங்களை தாக்கி தீயிட்டு கொளுத்தினர்.

சிங்கள முஸ்லீம் இனத்தவர்களுக்கு இடையிலான மோதலை அடுத்து கண்டியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று காலை முதல் இன்று காலை 6 மணிவரை கண்டியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், நிதி அமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது

'போதும் போதும் இன வன்முறையை தூண்டி விடுவது ஒரு மன்னிக்க முடியாத குற்றமாகும், அவற்றை தூண்டி விடும் அரசியல்வாதிகளது குடிமை உரிமைகள் பறிக்கப்பட வேண்டும்' என கூறியுள்ளார்.

குறித்த கலவரத்தால் தற்போது அந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு காவல்துறையினர் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.