இந்தியாவை விட 3 மடங்கு அதிகம் சீன ராணுவ பட்ஜெட் ரூ.11.4 லட்சம் கோடி

பீஜிங் : சீனாவின் ராணுவ பட்ஜெட் ரூ.11.4 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. சீன ராணுவத்துக்கு ஒதுக்கப்படும் பட்ஜெட் தொகை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ராணுவத்தை பலப்படுத்தும் நாடுகளில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. அதற்கு அடுத்த இடத்தை சீனா பிடித்துள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பு துறை பட்ஜெட் சுமார் ரூ.39 லட்சம் கோடியாகும். உலகிலேேய ராணுவத்துக்கு இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்கீடு செய்வது அமெரிக்கா மட்டுமே. 

இந்நிலையில், சீனாவில் 2018ம் ஆண்டுக்கான ராணுவ பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட 8.1 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ரூ.10 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்தாண்டு இது ரூ.11 லட்சத்து 37 ஆயிரத்து 500 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் ராணுவ பட்ஜெட்டை விட மூன்று மடங்கு அதிகமாகும்.