ஸ்ட்ரைக்கை மீறி வெளியான ஒரே ஒரு தமிழ் படம்

சென்னை : டிஜிட்டல் திரைப்பட ஒளிபரப்புக்கான QUBE மற்றும் UFO கட்டண உயர்வை கண்டித்து நேற்று முதல் புதிய படங்கள் எதுவும் வெளிவராது என்ற தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. அதோடு இந்த முடிவை மீறி நடக்கும் தயாரிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தது.

இதனால் இன்று வெளிவருவதாக இருந்த சில படங்கள் தள்ளி வைக்கப்பட்டன. அதையும் மீறி 'சூரியன்', 'இந்து' போன்ற படங்களின் இயக்குனர் பவித்ரன் இயக்கி, தயாரித்துள்ள 'தாராவி' படம் இன்று வெளியாகி உள்ளது. புதுமுகங்கள் நடித்துள்ள இந்தப் படத்திற்கு பவித்ரன் மகன் அபய் இசை அமைத்துள்ளார். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத்த்தின் அறிவிப்பை மீறி படம் வெளியிட்டது குறித்து பவித்ரன் கூறியிருப்பதாவது, 'தாராவி படத்தை மிகவும் கஷ்டப்பட்டு கடன் வாங்கி தயாரித்துள்ளேன். பட வெளியீட்டு தேதி முன்பே தீர்மானிக்கப்பட்டது. இன்று வெளிவராவிட்டால் எனக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும்.

இந்த மாத இறுதியில் பெரிய படங்கள் வெளிவருகிறது. அதோடு என்னால் போட்டி போட முடியாது. அதனால் இப்போது வெளியிடுவதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. பட வெளியீட்டுக்கு உதவுவோம், துணையாக இருப்போம் என்ற எந்த உத்தரவாதத்தையும் தயாரிப்பாளர் சங்கம் தரவில்லை' எனக் கூறியிருக்கிறார் பவித்ரன்.