துபாய் போலீஸ் சொல்வதை ஏன் நம்பணும் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து விசாரிக்க கோரிக்கை

மும்பை: நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மும்பை போலீஸ் மற்றும் மகாராஷ்டிரா மாநில முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் இறந்துவிட்டதாக முதலில் கூறப்பட்டது. பின்னர் அவர் மதுபோதையில் குளியல் தொட்டியில் விழுந்து நீரில் மூழ்கி இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

அது எப்படி ஒருவர் குளியல் தொட்டியில் மூழ்கி உயிர் இழப்பார் என்று பாலிவுட் பிரபலங்கள் உள்பட பலரும் கேள்வி எழுப்பினர்.

விசாரணை

ஸ்ரீதேவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி துபாய் போலீசார் பரபரவென விசாரணை நடத்தினார்கள். ஆனால் இறுதியில் அவர் குளியல் தொட்டியில் தவறி விழுந்து இறந்துவிட்டதாகக் கூறி வழக்கை முடித்துவிட்டனர்.

சந்தேகம்

ஸ்ரீதேவி இறந்த சூழல் குறித்து சமூக ஆர்வலர்கள் பலருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ஜெய் ஹோ பவுன்டேஷனின் சட்டப்பிரிவு தலைவர் ஆதில் கத்ரி ஸ்ரீதேவியின் மரணம் குறித்து விசாரணை நடத்துமாறு மும்பை போலீஸ் கமிஷனர் தத்தாத்ரே பத்சால்கிகருக்கு இமெயில் அனுப்பியுள்ளார்.

விசாரணை

துபாய் போலீஸ் சொல்வதை எதற்காக அனைவரும் நம்ப வேண்டும்? ஸ்ரீதேவியின் மரணம் குறித்து எழுந்துள்ள சந்தேகம் தீர மும்பை போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும். அவரின் மரணம் மர்மமாக உள்ளது என்று ஆதில் தனது இமெயிலில் எழுதியுள்ளார்.

கமிஷனர்

போலீஸ் கமிஷனர் தனது இமெயிலை சட்டம் ஒழுங்கு துறையின் துணை கமிஷனருக்கு பார்வர்ட் செய்துள்ளதாக ஆதில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.