என்ன நடக்க போகுதோ பதற்றத்தில் தமிழகம் ஆந்திராவில் மீண்டும் குறிவைக்கப்பட்ட 84 தமிழர்கள்

ஆந்திராவில் செம்மரங்களை வெட்டியிருக்கலாம், கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அம்மாநில காவல்துறை பலரை  கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட தமிழர்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாது என்பதால் அவர்கள் மீது அடுத்தடுத்து வழக்குகளை பதிவு செய்து பிணையில் வெளிவர முடியாமல் தடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது, ஆந்திர மாநிலம் திருப்பதியை அடுத்து உள்ள ஆஞ்சநேயபுரம் சோதனை சாவடியில் 84 தமிழர்களைச் செம்மர கடத்தல்தடுப்பு காவல்துறை கைது செய்துள்ளனர்.

தமிழர்கள் மீதான வழக்குகளை நடத்துவதோ, அவர்களுக்கு சட்டப்படி தண்டனைப் பெற்றுத் தருவதோ ஆந்திரக் காவல்துறையின் நோக்கமாகத் தெரியவில்லை.

மாறாக, அவர்கள் மீதான வழக்குகளை நடத்தாமல், தொடர்ந்து சிறைகளிலேயே அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்துவது தான் ஆந்திராவின் நோக்கமாகத் தோன்றுகிறது.

தற்போது கைது செய்யப்பட்டவர்கள் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இவர்கள் அனைவரும் செம்மரம் வெட்ட ஆந்திர மாநிலம் கடப்பா நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

இவர்களில் கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் உள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் பலர் தான் எதற்கு அழைத்துவரப்பட்டதாகத் தெரியாது என்று கூறியுள்ளனர்.

மாணவர்கள் இது குறித்து கூறுகையில், அதிக பணம் தருவதாக கூறி அழைத்துவரப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த 2015-ஆம் ஆண்டில் ஆந்திர வனப்பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 20 பேர் கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்; குற்ற வழக்கில் ஆந்திர நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பிறகும் தமிழகத் தொழிலாளர்கள் கை விலங்கிட்டு சிறைக்கு அழைத்துச் செல்லப்படும் விடியோ பதிவும், தமிழகத் தொழிலாளர்கள் சிலரை ஆந்திர வனத்துறையினர் மிகவும் கொடூரமாகத் தாக்கும் வீடியோ பதிவும் வைரலாக வலம் வந்தன.

அதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக தமிழக அரசால் சில சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் தொடர்ச்சியாக கடந்த 2016-ம் ஆண்டு 287 தொழிலாளர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

ஆனால், அடுத்த சில மாதங்களில் அவர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் விடுதலை செய்யப்பட்டதை சாதனையாக கொண்டாடிய தமிழக ஆட்சியாளர்கள் அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டதை தடுப்பதற்கு தவறி விட்டார்கள்.

அவர்களை மீட்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது. எனவே, ஆந்திர அரசுடன் பேச்சு நடத்தியோ, சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டோ அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் இச்சிக்கலை மனித உரிமை ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று பாதிக்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கு இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என்பதே பாமக போன்ற மக்கள் நலனுக்காக போராடும் காட்சிகளின் கோரிக்கையாக உள்ளது.