கழுத்தை அறுப்பதாக கூறிய பிரிகேடியருக்கு பாதுகாப்பு அளிக்கும் இராணுவம்

லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக இராணுவம் அறிவித்துள்ளது.

லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்பாக கடந்த 4ஆம் திகதி ஈழத் தமிழர்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது தமிழரின் கழுத்தை அறுப்பதாக சைகை காண்பித்த பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிரான எதிர்ப்பலைகள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து அவர் விசாரணைக்காக இலங்கை அரசாங்கத்தினால் கடந்த வாரம் நாட்டிற்கு அழைக்கப்பட்டார்.

இந்த நிலையில் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ, இலங்கை இராணுவத் தளபதி லெப்தினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்கவை நேற்று திங்கட்கிழமை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போதே இராணுவத் தளபதி இந்த உறுதியை அவருக்கு அளித்திருக்கின்றார்.

மேலும் பிரிகேடியர் பிரியங்கவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக சகலவித இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளையும் தாம் மேற்கொள்வதாகவும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

இதேவேளை விசாரணை என்ற பெயரில் நாட்டிற்கு மீளழைக்கப்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ புலமைப் பரிசிலுக்காக சீனாவுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.