ஜெ வின் அரசியல் தந்திரத்தை காப்பியடிக்கும் கமல் மதுரையில் மைய்யம் கொள்வதன் பின்னணி

இந்த மண்ணில் எல்லோருமே விமர்சனங்களுக்கு உட்பட்டவர்கள்தான், அதில் கமல் மட்டும் விதிவிலக்க! என்னதான் உலக நாயகனாக இருந்தாலும் கூட உள்ளூரில் அவர் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள், சர்ச்சைகள். அவற்றில் முக்கியமானது ‘ஒரு குறிப்பிட்ட சாதியை தூக்கிப் பிடிக்கிறார். அதிலும், அது அவர் பிறந்த சமுதாயமும் கூட அல்ல!’ என்கிற விமர்சனம்தான்.

 

 

கமல்ஹாசன் சதாய்த்த திரைப்படங்களில் ‘தேவர்மகன் மற்றும் விருமாண்டி’ இரண்டும் மிக முக்கியமானவை மட்டுமல்ல மூர்க்கத்தனமாக விமர்சிக்கப்பட்டவை. காரணம், தேவமார்கள்! எனும் குறிப்பிட்ட சமுதாயத்தை ‘வீரப்பரம்பரை’யாக சித்தரித்து அவர் திரைப்படங்களை இயக்குகிறார் என்று ஏக திட்டுக்களை வாங்கிக் கட்டின.

அதிலும் ‘தேவர்’மகன் என்று அவர் நேரடியாகவே பெயர் வைத்து, தன்னை அந்த சமுதாயத்தின் பிள்ளையாகவே காட்டிக் கொண்டு அதிரிபுதிரி ஹிட் படம் கொடுத்தபோது தமிழகத்தில் குறிப்பிட்ட சில சமுதாயங்கள் அவரை வெறுப்புடன் பார்க்க துவங்கின.

 

 

அடுத்து சில வருடங்கள் கழித்து அவர் எடுத்த படத்துக்கு ‘சண்டியர்’ என பெயர் வைத்தபோது, தலித் சமுதாய தலைவர்களில் ஒருவராக பார்க்கப்படும் டாக்டர்.கிருஷ்ணசாமி கொதித்தெழுந்தார்.

‘ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சாதியை தூக்கிப்பிடிக்கும் வகையில் இந்தப் பெயரை கமல் வைக்க கூடாது. வைத்தால் அது வன்கொடுமைகளுக்கும் மேலும் வலுவூட்டும்’ என்றார். இதற்கு கமல்ஹாசன் ‘என் படத்துக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்று பிறர் வகுப்பெடுக்க தேவையில்லை.

 

 

படத்தின் கதை எந்த சமுதாயத்தையும் உயர்த்திப் பிடிக்கும் நோக்கில் இல்லை. இது தூக்கு தண்டனை பற்றியது.’ என்று எவ்வளவோ சொல்லியும் கிருஷ்ணசாமி கீழிறங்கி வரவில்லை. நீதிமன்ற படியேறிய இவ்விவகாரத்தில் கடைசியில் கமல்தான் பணிய வேண்டி வந்தது. அதன் பிறகே சண்டியர் படமானது ‘விருமாண்டி’யானது.

இதன் பிறகு ‘வர்றார் சண்டியர்’ எனும் பெயரில் இன்னொரு சிறிய நடிகரின் படம் வந்தபோது எந்த பேச்சு மூச்சுமில்லை என்பது தனிக்கதை!
ஏற்கனவே தென்னகத்து மக்களை தலையில் தூக்கி வைத்திருந்த கமல்ஹாசன், ’சண்டியர்’ பட தலைப்பு பிரச்னையில் அடிபட்டதால் மேலும் அந்த உணர்வை தனக்குள் வெறித்தனமாக உட்செலுத்திக் கொண்டார்! என்பார்கள்.

 

 

இந்நிலையில்தான் இன்று கட்சி துவங்கும் கமல்ஹாசன், மதுரையில் கொடியேற்றி, பொதுக்கூட்டம் நடத்துவதையும் அதே கோணத்தில் விமர்சிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ”கமல்ஹாசன் எதிலும் வித்தியாச மற்றும் துல்லிய பார்வையுடையவர். புவியியல் அமைப்பு படி தமிழகத்தின் நடு நாயகமாக இருப்பது திருச்சி.

ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்க்க வேண்டுமென்றால் திருச்சியில்தானே அவர் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும்? அதைவிடுத்து மதுரையை மையப்படுத்துவது ஏன்?

 

 

அப்படியானால் பல காலமாக தான் காதல் கொண்டிருக்கும் அந்த மண்ணின் குறிப்பிட்ட மற்றும் பெரும்பான்மை சமுதாயம் ஒன்றை ஈர்க்க நினைக்கிறாரா கமல்ஹாசன்? ஏற்கனவே அந்த சமுதாயத்தை மையப்படுத்தித்தான் ஜெயலலிதா அ.தி.மு.க.வை நடத்திக் கொண்டிருந்தார், இப்போது அவர் இல்லாத நிலையில்

சரியான கலர்ஃபுல் தலைமை இன்றி தவிக்கும் அந்த தென்னக சமுதாய மக்களை தன் வசப்படுத்த முயல்கிறாரா கமல்? இது அவருக்கு எதிராக தலித்களை திருப்பாதா?” என்று தொடர் கேள்வி கேட்கிறார்கள்.
பதில் சொல்ல வேண்டியது கமலே!