ஆண் என நம்ப வைத்து இரு பெண்களை ஏமாற்றி மோசடி பெண் கைது

தன்னை ஆண் என நம்ப வைத்து இரு பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி ஒரு பெண் பணம் பறித்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் பிக்னோர் என்ற இடத்தில் வசித்து வரும் ஒரு ஸ்வீட்டி என்ற பெண், சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசைப்பட்டார். அதனால், தனது பெயரை கிருஷ்ணா சென் என மாற்றி, ஆண் போல சிகையலங்காரம் மற்றும் உடைகள் அணிந்து முகநூலில் போலி கணக்கு தொடங்கி, பெண்களை வளைக்கத் தொடங்கினார். அவர் விரித்த வலையில் சில பெண்கள் சிக்கினர். அதில், நைனிடாலை சேர்ந்த தொழிலதிபரின் பெண்ணிற்கு காதல் வலை வீசிய அவர், அதை திருமணம் வரை கொண்டு சென்றுள்ளார். மேலும், போலியாக இருவரை தயார் செய்து தனக்கு பெற்றோர்கள் என நடிக்க வைத்து கடந்த 2014ம் ஆண்டு திருமணத்தையும் முடித்துள்ளார். மேலும், ஆன்லைனில் செயற்கை ஆணுறுப்புகளை வாங்கி உடலுறவிலும் ஈடுபட்டுள்ளார். அப்போதுதான் அவர் ஆண் இல்லை என்பது அப்பெண்ணிற்கு தெரியவந்துள்ளது. ஆனாலும், வெளியே கூறமுடியாமல் அவர் தவித்து வந்துள்ளார்.

மேலும், அவரை கிருஷ்ணாசென் வரதட்சணை கொடுமை செய்து ரூ.8.5 லட்சம் வரை பணம் பறித்துள்ளார். அதேபோல், முகநூலில் வேறொரு பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து அவரையும் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளார். அவரின் கொடுமை நாளுக்கு நாள் அதிகமாகவே, பொறுத்துக்கொள்ள முடியாத முதல் மனைவி இதுபற்றி போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து ஸ்வீட்டியை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆண் போல் நடித்தது மட்டுமில்லாமல் புகைப்பிடிப்பது, மது அருந்துவது பழக்கங்கள் மூலம் தன்னை ஸ்வீட்டி ஆணாகவே மற்றவரிடம் காட்டியுள்ளார். இத்தனை வருடங்களாய் இவரை ஆண் என நினைத்தோமே என அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.