ரோஹித் 40 எக்ஸ்ட்ராஸ் 57 என்னடா இது ரோஹித்துக்கு வந்த சத்திய சோதனை

தென்னாப்பிரிக்க தொடரில் தொடர்ந்து சொதப்பிவரும் ரோஹித், இன்று மீண்டெழுந்து பெரிய இன்னிங்ஸ் ஆடுவாரா என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் விராட் கோலியின் அபார சதத்தால் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில், சாஹல் மற்றும் குல்தீப்பின் சுழலில் தென்னாப்பிரிக்கா சுருண்டதால், இந்தியா எளிதில் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியிலும் ரோஹித் ஏமாற்றமளிக்க, கோலியின் அபார சதத்தால் இந்தியா 300ஐ தாண்டியது. நான்காவது போட்டியிலும் கோலியும் தவானும் மட்டுமே சிறப்பாக ஆடினர். 

டெஸ்ட் போட்டிகளில் சோபிக்காத ரோஹித், ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நான்கு போட்டிகளிலும் ஏமாற்றமளித்தார். 

முதல் போட்டியில் 20 ரன்கள் எடுத்த ரோஹித், இரண்டாவது போட்டியில் 15 ரன்களும் மூன்றாவது போட்டியில் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட்டானார். 4வது போட்டியிலும் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். 4 போட்டிகளிலும் சேர்த்தே 40 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்திய துணைக்கண்டத்தில் மட்டுமே ஜொலிக்கும் ரோஹித், தொடர்ச்சியாக ஓவர்சீஸ் போட்டிகளில் சொதப்பி வருகிறார்.

இன்று 5வது ஒருநாள் போட்டி நடக்க இருக்கிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் ரோஹித் சர்மா, வெறும் 40 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். தென்னாப்பிரிக்க அணியினர் எக்ஸ்ட்ராஸ் மூலமே 57 ரன்கள் கொடுத்துள்ளனர். ரோஹித் அடித்த மொத்த ரன்களை விட எக்ஸ்ட்ராஸே அதிகமாக உள்ளது. அந்த அளவிற்கு மோசமாக விளையாடி வருகிறார் ரோஹித். 

 

 

இந்திய துணைக்கண்டத்தில் நடக்கும் போட்டிகளில் ஜொலிக்கும் ரோஹித், சீம் மற்றும் பௌன்ஸ் இருக்கும் தென்னாப்பிரிக்காவில் சோபிக்கவில்லை. அடுத்த ஆண்டு உலக கோப்பை வர உள்ள நிலையில், ரோஹித் அனைத்து வகையான ஆடுகளங்களுக்கு ஏற்ற வகையிலும் ஆட முனைய வேண்டும். அனைத்து வகையான ஆடுகளங்களையும் கிரகித்து கொண்டு அதற்கேற்றாற்போல விளையாடுவதுதான் அவருக்கும் அணிக்கும் பயனுள்ளதாக அமையும்.

 

 

ஒவ்வொரு முறையும் கடுமையான பின்னடைவிற்குப் பின்னர் அபரிமிதமாக மீண்டெழும் ரோஹித், இந்த முறையும் அதேபொல மீண்டெழுந்து இன்றைய போட்டியில் பெரிய இன்னிங்ஸ் ஆடுவாரா என பார்ப்போம்..