நான் எங்க ஜெயலலிதாவை பார்த்தேன்அவங்கதான் பார்த்தாங்க கையை விரித்த சசிகலா அண்ணன் மகன்

மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது தான் அவரை பார்க்கவில்லை என சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் தெரிவித்துள்ளார். 

அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

அந்த 75 நாட்களும் வெளியாட்கள் யாரையும் ஜெயலலிதாவை பார்க்க சசிகலா அனுமதிக்கவில்லை. இதனால் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டி வந்தனர். 

இதையடுத்து பதவி பிடுங்கப்பட்ட பன்னீர்செல்வமும் ஜெ மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கினார். 

இதையடுத்து ஜெயலலிதா மரணத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. ஜெயலலிதாவிற்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், கைரேகை பதிவு பெற்ற டாக்டர் பாலாஜி, எம்பார்மிங் செய்த டாக்டர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் நோட்டீஸ் அனுப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

மேலும் சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணப்ரியா ஆணையத்தின் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். 

இந்நிலையில் இளவரசியின் மகனும் ஜெயா டிவி சிஇஓவுமான விவேக் ஜெயராமனை விசாரணைக்கு ஆஜராகுமாறு நீதிபதி கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பினார். அதன்படி இன்று விவேக் ஜெயராமன் விசாரணைக்கு ஆஜரானார். 

அப்போது, மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்த போது பார்க்கவில்லை எனவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது தாம் வெளிநாட்டில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விவேக் ஜெயராமனிடம் 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. மீண்டும் பிப்ரவரி 28ம் தேதி ஆணையத்தில் ஆஜராக உள்ளதாக விவேக் தகவல் தெரிவித்துள்ளார்.