யாரும் அறியாத அமெரிக்க டாலர் பற்றிய உண்மைகள்

உலகில் அதிக மதிப்பு கொண்ட பணம் எது என்றால் கண்ணை மூடிக் கொண்டு பலரும் அமெரிக்க டாலர்கள் என்று கூறுவார்கள். இதற்கு காரணம் உலகின் பல வர்த்தக ரீதியான விலை நிர்ணயம் அமெரிக்க டாலர்களின் நிகர மதிப்பு வைத்து தான் கணக்கிடப்படுகிறது. ஆனால், அமெரிக்க டாலர்களுக்கும் மேலான அதிக மதிப்புடைய பணமும் இருக்கின்றன.

யூரோ, பிரிட்ஸ் பவுண்ட், ஓமானி ரியால், ஜோர்டானியன் தினார், பஹ்ரைன் தினார், குவைத் தினார் போன்றவை அமெரிக்க டாலர்களை காட்டிலும் அதிக மதிப்பு கொண்டவையாக இருக்கின்றன.

சரி! அமெரிக்க டாலர்களில் இருக்கும் இரகசியம் என்னவென்று தானே கேட்கிறீர்கள்... இந்த இரகசியங்கள் அதன் அச்சில் இருப்பவை அல்ல... அதன் தரத்திலும், பரிவர்த்தனைகளின் போது பணத்தாள்களில் ஏற்படும் தாக்கங்கள் குறித்து பெரிதாக மக்கள் அறியாத இரகசியங்கள். இதுக்குறித்து யாரும் பெரிதாக பேசுவதும் இல்லை.

1996ல் ஒவ்வொரு அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், அந்நாட்டின் 80% பணத்தாள்களில் கொகைன் தடயங்கள இருப்பது அறியப்பட்டது. லாஸ் ஏஞ்சல்ஸில் மட்டுமே இதில் 75%த்தில் கொகைன் தடயங்கள் இருக்கலாம் என்று நம்பப்பட்டது. கொகைன் என்பது மட்டுமின்றி பல போதை பொருட்களின் தடயங்கள் அமெரிக்க பணத்தாள்களில் இருந்ததற்கான ஆதாரங்களும் இருந்தன.

பொதுவாக பணம் இல்லாத நேரத்தில் தான் மிகவும் வருத்தப்படுவோம். ஆனால், அமெரிக்காவில் யாரெல்லாம் தங்கள் கைகளில் இரண்டு டாலர் பணத்தாள் வைத்துள்ளார்களோ அவர்கள் எல்லாம் அருவருப்படைய வேண்டும். ஆம்! 2002ம் ஆண்டு தெற்கு சுகாதார மருத்துவ பத்திரிக்கை வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்றில், அமெரிக்காவின் இரண்டு டாலர் பணத்தாள்களில் 94% நோட்டுக்கள் கழிவறை சென்று கை கழுவாமல் வந்தால் எந்தளவு பாக்டீரியா தாக்கம் கொண்டிருக்குமோ, அந்தளவு பாக்டீரியா தாக்கம் கொண்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.

இது போன்ற விஷயங்கள் அமெரிக்க டாலர்களில் மட்டுமல்ல, எந்த நாட்டு பணமாக இருந்தாலும், அதில் பாக்டீரியா தாக்கங்கள் இருக்க நிறையவே வாய்ப்புகள் உள்ளன. ஆம், பொதுவாக ஒரு பணத்தாளில் மூவாயிரம் வகையிலான பாக்டீரியாக்கள் தாக்கம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவற்றை மைக்ரோப் என்று கூறுகிறார்கள்.

இந்த பாக்டீரியாக்கள் காரணமாக பருக்கள் மற்றும் சரும தொற்றுக்கள் கூட பரவலாம். இனிமேல், ஹோட்டலில் சாப்பிட்ட பிறகு, கழிவறை பயன்படுத்திய பிறகு கை கழுவது போலவே, நீங்கள் பில் கொடுத்த பிறகு பணத்தை தொட்ட பிறகும் கூட கை கழுவ வேண்டும்.

நுகர்வோர் ஆராய்ச்சி பத்திரிக்கை ஒன்று வெளியிட்ட ஆய்வறிக்கையில், மக்கள் புதிய பணத்தாள்களை தங்களுடன் வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள் என்றும். அதுவும் அதிகம் மடக்கப்படாத தாளாக இருந்தால் அதை பத்திரப்படுத்தி வைத்துக் கொள்கிறார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும், அதிக மதிப்பு கொண்ட புதிய தாளாக இருந்தால் அதை கௌரவமாக கருதுகிறார்கள் என்றும் இந்த ஆய்வில் அறியப்பட்டுள்ளது. சிலர் வங்கிகளில் புதிய தாள்கள் கேட்டு வாங்குவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

2009ல் ஸ்மார்ட் மணி என்பவர்கள் குறிப்பிட்டிருந்த தகவலில், பழைய அழுக்கான பணத்தாளை அதிகம் தொட்டு பயன்படுத்துவதால் சளி, காய்ச்சல் போன்ற தொல்லைகள் கூட ஏற்படலாம் என்று கூறியிருந்தனர். அதுமட்டுமின்றி, ஏற்கனவே சளி, காய்ச்சல், தும்மல் பிரச்சனை இருக்கும் நபர்கள் பணத்தாள்களின் மீதே கூட அந்த பாக்டீரியாவை பரவ செய்திருக்கலாம்.

அதிகமாக மருத்துவமனைகளில், மருந்தகங்களில் கொடுத்து வாங்கும் பணத்தாள்களில் இத்தகைய நோய் கிருமிகள் தாக்கம் இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இதனால், தொற்று இல்லாத நபர்களுக்கும் கூட தொற்று ஏற்படலாம். உங்களுக்கே தெரியாமல், உங்கள் மீது கிருமிகள் அண்டிக் கொண்டிருக்கலாம். எனவே, பணத்தை அதிகம் நுகரவோ, எச்சில் தொட்டு என்னவோ வேண்டாம் என்கிறார்கள்.

பணத்தாள்களால் தானே இத்தனை பிரச்சனை, பேசாமல் காசுகள் மட்டும் வைத்துக் கொண்டால் என்னவாகும்...? காசுகள் மட்டும் வைத்துக் கொண்டு சுற்றினால்.. எந்த கோவிலில் உட்கார்ந்திருந்த என்று தான் கேலி செய்வார்கள். மற்றும் இந்த பிரச்சனை காசுகள் மத்தியிலும் இருக்கிறது.

ஆம்! பெரும்பாலும் வியர்வை சார்ந்த கிருமிகள் தொற்று அண்டியிருப்பது காசுகளில் தான்.

பொதுவாகவே ஒரு பணத்தாள் நீண்ட காலம் இருக்காது, சில சமயங்களில் பழைய தாள்கள், கிழிந்த நிலையில் வரும் தாள்கள் என பணத்தாள்கள் மறுசுழற்சி செய்யப்படும்.

அட என்னப்பா... அங்கதொட்டு, இங்கத்தொட்டு கடைசியில பணத்த தொட்டாலும் நோய்நொடி வந்திரும்ன்னு பயமுறுத்துரீங்க என்று வருத்தப்பட வேண்டாம். இந்த தொற்றுகள் ஒன்றும் உயிரை கொள்ளும் தொற்றுகள் இல்லை. மேலும், உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாக இருந்தால், இதெல்லாம் வெறும் தூசுக்கு சமானம்.