நான் சொல்றேனு தப்பா நினைக்காதீங்க தலைமை செயலகத்தில் தெறிக்கவிட்ட ஸ்டாலின்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் நேற்று சட்டப்பேரவையில் திறக்கப்பட்டது.

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை சட்டப்பேரவையில் திறக்கக்கூடாது என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஜெயலலிதா பட திறப்பு விழாவையும் புறக்கணித்தனர். 

குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர் ஆகியோருக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டபோதிலும் யாரும் இந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை. பிரதமர் கலந்துகொள்ளவில்லை என்பது ஒருபுறமிருக்க, ஆளுநர் பன்வாரிலால் கலந்துகொள்ளாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

 

 

இந்நிலையில், இன்று போக்குவரத்து கழகத்தை சீரமைக்க பரிந்துரைகள் அடங்கிய திமுகவின் ஆய்வறிக்கையை முதல்வரிடத்தில் வழங்கிய ஸ்டாலின், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

 

அப்போது, ஜெயலலிதாவின் படத்திறப்பு குறித்து கருத்து தெரிவித்தார். ஜெயலலிதா இறந்துவிட்டார். இந்நிலையில், நான் இந்த கருத்தை சொல்வதால் என்னை தவறாக நினைக்க வேண்டாம். ஜெயலலிதாவை நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்துள்ளது. ஒருவேளை ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், சசிகலாவுடன் சிறையில் இருந்திருப்பார். குடியரசுத்தலைவர், பிரதமர், ஆளுநர் ஆகியோர் படத்திறப்பு விழாவிற்கு வராததற்கு ஜெயலலிதா குற்றவாளி என்பதே காரணம். 

 

ஜெயலலிதாவின் படத்தை அதிமுக கட்சி அலுவலகத்திலோ நிர்வாகிகளின் வீடுகளிலோ வைத்தால் யாரும் எதுவும் கேட்கப்போவதில்லை. ஆனால், அனைவருக்கும் பொதுவான சட்டப்பேரவையில் வைத்ததால் தான் கேட்க வேண்டியிருக்கிறது என ஸ்டாலின் தெரிவித்தார்.