இப்படி செய்யுங்க எடப்பாடி கரெக்ட்டா இருக்கும் ஐடியா கொடுத்த செயல் தலைவர்

தமிழக போக்குவரத்து கழகத்தை சீரமைப்பது தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய ஆய்வு அறிக்கையை சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இன்று வழங்கினார்.

போக்குவரத்து கழகம் கடும் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி, போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, டீசல் மற்றும் உதிரி பாகங்களின் விலை உயர்வு, பராமரிப்பு செலவு போன்றவற்றை காரணமாக காட்டி பேருந்து கட்டணத்தை இரட்டிப்பாக உயர்த்தியது தமிழக அரசு. 

திடீரென இவ்வாறு உயர்த்தியதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் அனைவரும் பேருந்தில் பயணிப்பதை தவிர்த்து விட்டு ரயில் பயணத்தை தொடங்க ஆரம்பித்துள்ளனர். 

இந்த நிலையில், போக்குவரத்து கழகத்தை சீரமைப்பது குறித்து தி.மு.க சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழுவானது அளித்த ஆய்வறிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வழங்கினார்.

முதலமைச்சருடனான இத்தகைய சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின் கூறியதாவது: 

27 பரிந்துரைகள் அடங்கிய ஆய்வறிக்கையை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்துள்ளோம். தமிழக போக்குவரத்து சேவையை சேவையாகவே கருதி, அதன்மூலம் ஏற்படும் இழப்புகளை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

கலால் வரி மற்றும் மதிப்பு கூட்டுவரி போன்றவற்றின் காரணமாகவே டீசல் விலை உயர்ந்துள்ளது. எனவே பெட்ரோல், டீசல் போன்றவற்றை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்.

அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் நல்லிணக்க முகாம்கள் நடத்தபட வேண்டும், மத்திய தொகுப்பு நிதியத்தின் மூலம் போக்குவரத்து கழகங்களை சீரமைத்திட வேண்டும் போன்ற 27 பரிந்துரைகளை அளித்துள்ளோம்.

அதன் அடிப்படையில் செயல்பட்டால், பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியமே வராது. ஆனால் அதை செயல்படுத்துகிறார்களா? என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.